பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்தமையால் நாம் குன்றக்குடிக்கு வருவது உறுதிப்பட்டது. இத்திருத்தலத்தில் அப்பரடிகள் அருளிச் செய்த ஐந்தாம் திருமுறையில்,

"அரவு கையின ராதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே”

-(ஐந்தாம் திருமுறை 38-8)

'என்ற பாடலிலும் 'பணி கொள்வர்' என்று வருவதும் அறியத்தக்கது. நாமும் பொதி சுமக்கும் மாட்டின் நிலையில் உடன்பட்டோம்.

"கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிசை
                                    கண்டதுண்டோ?
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார்
புரத்தைச் சினக்கும் கமலையுள் ஞானப்பிர காச சிதம்பர இன்(று)
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே!”

என்பது குருஞான சம்பந்தர் வாக்கு. இந்த மனநிலையில் பொதி சுமக்கும் மாடு விருப்பு-வெறுப்பின்றித் தன் கழுத்தைக் கொடுப்பது போல நாமும் பொறுப்பேற்கலாயிற்று.

மரு ஈரத்தமிழ்மாலை

ஆரூரர் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள இறைவனை, "மருஈரத் தமிழ் மாலை" பாடிப் பரவினார். இந்தப் பதிகத்தைச் சேக்கிழார் "மருஈரைத் தமிழ் மாலை" என்று போற்றுகின்றார். ஏன்? இந்தப் பதிகத்தின் பாடல்கள் ஒவ்வொன்றின் ஈற்றடியிலும் "என்னமுதே எனக்கார் துணை நீயலதே" என்று கேட்கின்றார். இறைவனைத் தவிர வேறு துணை-பற்றுக் கோடில்லாமையை உறுதியும், ஏக்கமும்