பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

291


நிலையிலோ இறைவனை வணங்குதல் பயன்தராது. இறைவனைப் பற்றுதலில் தெளிவும் உறுதியும் வேண்டும். வாழ்க்கையில் ஒருவர்தான் உற்ற துணையாக அமைய இயலும்; முடியும். அந்த ஒருவன் இறைவன் என்று உணர்ந்து அவனைப் பற்றி நட்புப் பாராட்டுதல் அடியவர் இயல்பு. இறைவனிடம் அடியவர் கொள்ளும் நட்பு, தன்னல விழைவினால் அன்று. அடியவர்கள் இறைவனிடத்து நட்புரிமை கொண்டாடுதலுக்குரிய காரணம் இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பது, உயிர்களின் உய்தி கருதி இறைவனின் கருணையினால் இயற்றப் பெறும் ஐந்தொழில் இயக்கத்தில் வாழும் உயிர்க்குலத்திற்குத் தொண்டு செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். இக்குறிக்கோளினை அடைய இறைவனைத் துணையாகக் கொள்வதே நோக்கம், இறைவன் மாட்டு அன்பு செய்தலே, வாழ்க்கையின் குறிக்கோளான பிறகு, இறைவனிடம் எதை எதிர்பார்ப்பர். ஒரேவழி விரும்பிக் கேட்டாலும் அவனுக்காட்படும் நிலையையே விரும்பிக்கேட்பர்; இறைவன் குறிப்பறிந்து தொண்டு செய்யும் வாய்ப்பையே விரும்புவர். ஆதலால் அடியவர்கள் வாழ்க்கையில் பெற்றது. பெறாதது என்ற கணக்கும் இல்லை; அவ்வழிப்பட்ட துன்பமும் இல்லை. அடியவர்கள் இறைவனைத் தவிர வேறொன்றைப் பற்றாகவும் கொள்ள மாட்டார்கள். இங்ஙனம், முற்றாக இறைவனையே நம்பி - சார்ந்து வாழ்க்கை நடத்துபவ்ர்கள் அல்லற் படுத்தக் கூடாது. இறைவனைத் தவிர வேறு ஒரு களைகண்ணும் இல்லாது அலந்தார் போல வாழும் அடியார்களை இறைவன் காப்பாற்ற வேண்டும்; சோறும் கூறையும் தந்தருள வேண்டும். ஆனால் இறைவன் அப்படிச் செய்யும் "புத்திசாலியாக" இல்லை என்பது நம்பியாரூரர் கருத்து. ஆம்! இறைவன் அடியவர்களின் அன்பில் குளிப்பவன். அடியவர்களுடைய அன்பை நுகர்ந்து அனுபவிப்பதில் பித்துப்பிடித்தலைபவன். படும் துயரம் அதிகமாகும்பொழுது எல்லாம் அடியவர்கள்