பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

29


களையும் அடிகளையும் அப்படியே எடுத்தாண்டு போற்றிப் பெருமைப் படுத்தியுள்ளனர்.

பெரியபுராணம்

சேக்கிழார், திருத்தொண்டர் சீர்பரவும் செஞ்சொற் காப்பியத்தை "எடுக்கும் மாக்கதை" என்று பாடத் தொடங்கினார். சேக்கிழார், தமது நூலுக்குப் பெரிய புராணம் என்று பெயர் சூட்டவில்லை. ஆனால், பெரியோர் வரலாற்றைக் கூறுவதாலும், ஒதுவோருக்குப் பேசரிய பெருமை சேர்ப்பதாலும், பிறவாயாக்கைப் பெரியோன் பெருமையை - அப் பெரியோன் அடியார்க்கு எளியனாக எழுந்தருளிய அருமையில் எளிய பெருமையை எடுத்து விளக்குவதனாலும், முன்னும் பின்னும் இதனை யொத்த பெருநூல் தோன்றாமையாலும் பெரியபுராணம் என்று பாராட்டப் பெறுகிறது. தமிழில் புராணங்கள் பலவுண்டு. அவற்றில் சிறப்புடையனவும் உண்டு; சிறப்பில்லாதனவும் உண்டு. ஆனால், அந்த வரிசையில் பெரியபுராணம் வைத்து எண்ணத் தக்கதன்று. புராணம் என்று உலக வழக்கில் கூறினாலும் பெரியபுராணம் புனைந்துரைக்கப் பட்டதன்று. அஃதொரு வரலாற்று நூல்; வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சரிதநூல்; பத்திச் சுவை நலம் பாரிக்கும் பெருநூல்; இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இன்தமிழ் மறைநூல்; "திசை யனைத்தின் பெருமை யெல்லாம் தென் திசையே வென்றேற"ச் செய்த திருநூல்; "அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல"த் தோன்றிய அரிய பெரிய அருள்நிறை விறல்நூல்; தமிழ் மொழியின், "இசை முழுதும் மெய்யறிவும்” கொண்டு விளங்கும் முழுமுதல்நூல். சேக்கிழாரின் செஞ்சொற் காப்பியம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் தனிப்பேரரணாக அமைந்த தோடன்றி ஆக்கமும் வழங்கியது. ஆதலால், சேக்கிழார் தந்த பெரியபுராணத்தினை ஆரக்கற்றுத் துய்க்கவேண்டும்; நாள்-