பக்கம்:குமண வள்ளல்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

மிழ் நாட்டில் பழங்காலத்தில் இருந்த உபகாரிகளில் ஏழு வள்ளல்களைச் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் காலத்துக்குப் பின் வாழ்ந்தவர்களுக்குள் ஈகைத் திறம் படைத்தவர்கள் சிலரே, குமணன் அவர்களில் சிறந்தவன். அவனுடைய வரலாறு மனத்தை உருக்குவது.

புறநானூற்றில் உள்ள சில பாடல்களும், கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் ஒன்றும் அவன் வரலாற்றை அறிவதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அவற்றைக் கொண்டு இந்த வரலாற்றை எழுதினேன். புரவலர்களுடைய வரலாற்றை அறிவதற்குப் புலவர்களே துணை புரிகிறார்கள். அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் தமக்கு ஈந்த வள்ளல்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். இருவகையினரும் மறைந்து போனாலும் புலவர்கள் இயற்றிய பாடல்கள் அவ்விரு வகையினர் வரலாற்றையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.

குமணனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் புலவர்கள் இருவர். பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். அவர்கள் வாழ்க்கையும் குமணனுடைய வாழ்க்கையும் பிரிவின்றி இணைந்திருக்கின்றன. அவர்கள் வரலாற்றை வேறாகவும் அவன் வரலாற்றை வேறாகவும் காணமுடியாது. ஆதலின், இப்புத்தகத்தில் புலவர் வரலாறும் குமணன் வாலாறும் இணைந்தே விரிவாக அமைந்திருக்கின்றன.

கிடைத்த செய்திகளை அக்கால நிலை, மன்னர் இயல்பு, மக்கள் இயல்பு, புலவர் நிலை, மக்கள் மனநிலை என்பவற்றோடு வைத்து நோக்கி, இணைப்பில்லாத இடங்களை அந்த இயல்புகளுக்கும் நிலைகளுக்கும் ஒத்த நிகழ்ச்சிகளாலும் உரையாடலாலும் நிரப்பி இந்த வரலாற்றை எழுதினேன்.

பழங்காலத்துப் புலவரும் புரவலரும் ஒன்றிப் பழகிய உறவைச் சிறப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அந்த உறவுதானே நாட்டின் பண்பை உயர்த்த வழிகோலுவது?

கல்யாணபுரம் கி. வா. ஜகந்நாதன்
மயிலை

10--10-'55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/5&oldid=1361801" இருந்து மீள்விக்கப்பட்டது