பக்கம்:குமண வள்ளல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ் கேட்ட புலவர்

3

பெருஞ்சித்திரனாருக்கு இந்தச் செய்தி தெரியாது. அவர் மிக்க ஆர்வத்தோடு அதிகமான் நெடுமான் அஞ்சியைப் பார்க்கும் பொருட்டு அவன் மாளிகையை அடைந்தார். எந்தப் புலவர் வந்தாலும் அரசனுடைய கட்டளையின்றியே வேண்டிய உபசாரங்களை அங்குள்ளவர்கள் செய்வார்கள். அப்படியே பெருஞ்சித்திரனாருக்கும் உபசாரங்கள் நடந்தன. "அரசர் பிரானைப் பார்த்து அளவளாவ வேண்டும்" என்ற தம் கருத்தைத் தெரிவித்தார் புலவர். அவன் அப்போது தான் ஆழ்ந்த மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தான். புலவர்களிடத்தில் அவனுக்கு இருந்த பெருமதிப்பை அரண்மனையில் உள்ளவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆதலின், பெருஞ்சித்திரனார் வரவை ஒருவர் அதிகமானிடம் தெரிவித்தார். அவன் அவரை முன்பு அறிந்ததில்லை. “அவருக்குத் தக்கபடி பரிசு அளித்து அனுப்புங்கள். மற்றொரு முறை வந்தால் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று அவன் பணித்தான். .

அவ்வள்ளல் பணித்தபடியே ஒருவர் ஓர் அழகிய தட்டில் பொன்னும் பொருளும் பழமும் தாம்பூலமும் வைத்துக் கொணர்ந்து புலவர்முன் வைத்தார். ம“ன்னர்பிரான் இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். பின் ஒருமுறை வந்தால் பார்த்து இன்புறுவதாகத் தெரிவித்தார்” என்றார்.

இதைக் கேட்ட புலவர் மனத்தில் பெருத்த ஏமாற்றம் உண்டாயிற்று. அவர் எத்தனை காதம் கடந்து வந்திருக்கிறார் மறுபடியும் போய்விட்டு ஒரு முறை வருகிறதாவது! அவர் அடுத்த ஊரில் இருக்கிறவரா? அவருக்குக் கோபங்கூட வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/9&oldid=1359172" இலிருந்து மீள்விக்கப்பட்டது