பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குமரிக்கோட்டம்


பெட்டியை விட்டுக் கிளம்பியபடி இருந்தது. ஊரெங்கும் செட்டியாரின் தர்மகுணம், பகவத்சேவை இவை பற்றியே பேச்சு. "இருந்தால் அப்படி இருக்கவேண்டும் மகனென்று கூடக் கவனிக்கவில்லை. ஜாதியைக் கெடுக்கத் துணிந்தான் பழனி, போ வெளியே என்று கூறி விட்டார். இருக்கிற சொத்து அவ்வளவும் இனிப் பகவானுக்குத்தான் என்று சங்கல்பம் செய்து கொண்டார்" என ஊர் புகழ்ந்தது. பழனியின் நிலைமையோ!

"உன் தகப்பனார் பெரிய வைதிகப்பிச்சு அல்லவா? அவரைத் திருத்த முடியாத நீ. ஊரைத் திருத்த வந்து விட்டாயே, அது சரியா ?"

"தகப்பனார் பேச்சைக் கேட்காதவனுக்குத் தறுதலை என்று பெயர் உண்டல்லவா ? நீ ஏன் பழனி என்று பெயர் வைத்துக்கொண்டாய்? தறுதலை என்ற பெயர் தானே பொருத்தம்?"

இப்படிப்பட்டகேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒருவேலைக்கும் போகாமல். அவனுக்கு "மகாஜனங்கள்" தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர மறுத்துக் கலியாணம் என்பது, கட்டளையாக இருக்கக் கூடாது, நிர்ப்பந்தமாக இருத்தலாகாது, பரஸ்பர அன்பும் சம்மதமும் இருக்கவேண்டும், காதலர் கருத்து ஒருமித்து