பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

21


வாழ்வதே இன்பம் என்பன போன்ற கொள்கைகளை ஏற்கமறுத்து, ஜாதிப்பீடையை ஆண்டவன் ஏற்பாடு என்று விடாப் பிடியாகக் கொண்டு, ஒரே மகனை உலகில் பராரியாக்கிவிட்டு, பகவத் கைங்கர்யம் என்ற பெயரால் சொத்தை விரயம் ஆக்கிக்கொண்டிருந்த குழந்தைவேல் செட்டியார், தர்மிஷ்டர், சனாதன சீலர், பக்திமான், என்று கொண்டாடப்பட்டார். கோயில் மாலை அவருடைய மார்பில்! ஊர்க் கோடியில் உலவும் உலுத்தர்கள் வீசும் கற்கள், பழனியின் மண்டையில்! பழனி மனம் உடையவில்லை நாகவல்லியின் அன்பு அவனுக்கு, எந்தக் கஷ்டத்தையும் விநாடியிலே போக்கிவிடும் அபூர்வ மருந்தாக இருந்தது.

"இன்று எத்தனை கற்கள் ?" என்று தான் வேடிக்கையாகக் கேட்பாள் நாகவல்லி.

"பெரிய கூட்டம். வாலிபர்கள் ஏராளம். நாகு! பெண்கள்கூட வந்திருந்தார்கள் !" என்று கூட்டத்தின் சிறப்பைக் கூறுவான் பழனி. இவ்விதமாக வாழ்க்கை. ஒரே ஊரில் அல்ல ! நாகவல்லி ஆறு மாதத்துக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு மாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. அவள்மேல் குற்றம் கண்டுபிடித்ததால் அல்ல கணவன், சூனாமானாவாமே என்ற காரணத்தால், கஷ்ட ஜீவனந்தான். ஆனால், மற்றக் குடும்பங்கள், வீடு வாங்கினோம், நிலம் வாங்கினோம், இரட்டைப் பட்டைச் செயின் செய்தோம், இரண்டுபடி கறக்கும் நெல்லூர்ப் பசு வாங்கினோம் என்று பெருமை பேசினவே தவிர. வாங்கின வீட்டுக்கு மாடி இல்லையே, நிலம் ஆற்றுக்கால் பாய்ச்சலில் இல்லையே, செயின் எட்டுச் சவரன்தானே,