பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

35



ஜாதியைவிட்டு ஜாதியிலே சம்பந்தம் செய்கிறானென்ற உடனே, போடா வெளியே என்றுகூறிவிட்டவர்."

"மவனுக்குச் சொன்னாரு, அப்பாவா இருந்ததாலே. இவருக்கு எந்த அப்பன் இருக்காரு, போ வெளியேன்னு சொல்ல?"

மேஸ்திரி, மீனாவிடமிருந்து தெரிந்துகொண்ட இரகசியத்தைச் சமயம் வரும்போது தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மேற்கொண்டு தகவல்களைக் கேட்டறிய விரும்பினான். மீனா, மேஸ்திரியின் ஆவலைத் தெரிந்துகொண்டு சிரித்தபடி, "செச்சே, நீ, அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சி போச்சின்னு நினைக்காதே. செட்டியாருக்கு அவ கிட்ட கொள்ளே ஆசை இருக்கு: ஆனா பயமோ மலையத்தனை இருக்குது. மேலும், குமரி வேடிக்கையாகப்பேசுவாளே தவிர, ரொம்ப ரோஷக்காரி. அதனாலே, செட்டியார் ஏதாவது இளிச்சா, அவ அண்ணனிடம் சொல்லிவிடுவா. சும்மா, பார்க்கறதும், சிரிச்சுப் பேசறதுமா இருக்க வேண்டியது தான்" என்று கூறினாள். உண்மையும் அதுதான். செட்டியார் குமரியின் பார்வையையே விருந்தாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஜாதிகுலபேதங்கள் அர்த்தமற்றவை என்று பழனி எவ்வளவோ ஆதாரத்தோடு கூறியும், கேட்க மறுத்த செட்டியாரின் மனத்திலே, அந்தப் பெண்ணின் ஒரு புன்னகை எவ்வளவோ புத்தம் புதுக்கருத்துக்களைத் தூவிவிட்டது. ஜாதியாம் மகாஜாதி ! இந்தப் பெண்ணுடைய இலட்சணத்துக்கும் குணத்துக்கும் ஒருவன் இலயிப்பானே தவிர, இவள் ஜாதியைக்கண்டு பயப்படுவானோ என்ன!" என்று கூட