பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குமரிக் கோட்டம்


சுத்தம் செய்தாள், எலிகளைக் காணவேண்டும் என்ற அவசரத்திலே செல்பவர் போலச் செட்டியார், மூட்டைகள் இருக்குமிடம் போனார். குமரிமீது உராய்ந்தபடி! அதிலே அவருக்கு ஒரு ஆனந்தம் ! அவள் கொஞ்சம் அஞ்சினாள். சுத்தமாக்கிவிட்ட பிறகு, வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டு நின்றாள். செட்டியார், "குமரி! இந்தா, உனக்குப் பரிசு! சாப்பிடு, ருசியாக இருக்கும், உடம்புக்கும் நல்லது" என்று கூறி லேகியத்தைக் கொடுத்தார்.

"என்னதுங்க அது, நாவப்பழமாட்டம்!" என்று கேட்டாள் குமரி, லேகியத்தைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு. "அது மீனாட்சி பிரசாதம்" என்றார் அவர். "அப்படின்னா?" என்று குமரி கேட்டாள். "மீனாட்சி கோயிலில், சாமிக்குப் படைத்தது. சாப்பிடு, நல்லது என்று கூறிவிட்டு, வேறு ஏதோ வேலையைக் கவனிக்கப் போகிறவர் போல அறைக்கு வெளியே சென்றார். குமரி, லேகியத்தைத் தின்றாள். சுவையாகவே இருந்தது. எப்போதும் அவள் கண்டதில்லை அதுபோல லேகியத்தைத் தின்றுவிட்டு, செட்டியார் வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நெல் மூட்டை மீது சாய்ந்தபடி நின்று கொண்டே, அந்த அறையிலே இருந்த படங்களைப் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அந்த அறையிலிருந்த விளக்கு மிகப் பெரிதாகவும், மிகப் பிரகாசமாகவும் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் ஆச்சரியத்துடன், மறுபடி விளக்கைப் பார்த்தாள்: ஒரு