பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

குமரிக் கோட்டம்


அடக்கலாம். ஆனா, இந்தப் புத்ரபாசம் இருக்கே, அதனைச் சாமான்யமா அடக்கமுடியாது. சக்கரவர்த்தி தசரதனாலே கூடப் புத்ரசோகத்தைத் தாங்கமுடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விஷயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன், ஆச்சார அனுஷ்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது, எவ்வளவோ இதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக்கூட, உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச் சிரேஷ்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புத்ரன் ஏதோ கால வித்தியாசத்தாலும், கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்திலே இப்போது தலைவிரித்து ஆடுகிற அதர்மக் கோட்பாடுகளை நம்பியதனால். உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி, குலதர்மத்தைக் கைவிட்டு, வேறுகுல ஸ்திரீயை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று, பிடிவாதம் செய்தது கண்டு, சோகம்கொண்டு, தம் மகனுக்குச் சாஸ்திராதிகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துத் கூறித் தடுத்துப்பார்த்தும், முடியாததால், பெரியவா காலந்தொட்டு இருந்துவரும் புராதன ஏற்பாட்டுக்கு விரோதமாக நடந்துகொள்வதைக் கைவிட்டுவிடாத பட்சத்தில், இனித் தம் கிருஹத்தில் காலடி எடுத்துவைக்கவே கூடாது என்று கூறிவிட்டார். உன் முகாலோபனமும் செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவனும் வீட்டைவிட்டுப் போய்விட்டான். புத்ரசோகம் மகா கொடுமை.