பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை


இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் யாவும் பல் வேறு சமயங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியானவை. குமரியின் மூக்குத்தி, தாயும் கன்றும், கீரைக் தண்டு, அவள் குறை என்பன ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், குழலின் குரல் என்பது சோஷலிஸ்ட் ஆண்டு மலரிலும், உள்ளும் புறமும், புதிய வீடு என்பவை தினமணி கதிரிலும், கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், ஜடைபில்லை, திருட்டுக் கை என்பன கலைமகளிலும், குளிர்ச்சி, பெண் உரிமை என்பன தமிழ் நாட்டிலும் வெளியானவை. சேலம் மாவட்டத்தின் பேச்சும் வழக்கங்களும் வரவேண்டும் என்ற விருப்பத்துக்கிணங்க எழுதியது ‘புதிய வீடு’ என்ற கதையாதலின் அதில் அவ்விரண்டும் விரவியிருக்கும்.

சிறு கதைகள் வெள்ளம் போலப் பெருக்கெடுத்துவரும் இக்காலத்தில் பல துறைகளில் எழுத்தாளர்கள் புகுந்து தங்கள் படைப்பை அமைக்கிறார்கள். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளும் பல வகையில் அமைந்தவை.

இதற்குமுன் வெளியான ஏழு சிறு கதைத் தொகுதிகளைப் போலவே இதுவும் தமிழ் மக்களின் ஆதரவுக்கு உரியதாகும் என்று நம்புகிறேன்.

காந்தமலர்
கல்யாண நகர்
கி. வா. ஜகந்நாதன்
5—12—57