பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

கையில் ஒப்படைத்தான். அப்புறம் நடந்தது என்ன? ‘புரட்சித் தளபதி கும்மந்தான் கான் சாகிபு’ என்ற அரிய பெரிய ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள ஹில்லே அதைச் சொல்லி முடிக்கட்டும்:

1764-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி மாலை 5-மணிக்குக் கான் சாகிபு, படை முகாமின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டான். திண்டுக்கல் செல்லும் பாதையில், ஒரு பெரிய மாமரத்தில் தூக்கிலிடப்பட்டான். அவன் தலை, சந்தா சாகிபின் தலையைப் போல் வெட்டித் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. அவனது உறுப்புக்கள், கூறு கூறாகக் கொஞ்ச காலம் மதுரை மாநகரின் தலை வாயிலில் வைத்திருந்த பின், தஞ்சை, பாளையங்கோட்டை, திருவாங்கூர் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஆங்கில அதிகாரிகளின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, கலங்காமல் தனக்கு நேர்ந்த கதியை ஏற்றுக் கொண்டான் கான் சாகிபு என்றே தெரிகிறது. வெள்ளைத் தளபதி கேம்பல்லிடமும், ஆர்க்காட்டு நவாபிடமும் தன் உயிரைக் காப்பாற்றும்படி எந்த விதமான வேண்டுகோளும் விடுக்கவில்லை.

கான் சாகிபைத் தூக்கிலிட்டுக் கொல்ல முயன்ற போது, அவனைக் கொல்ல முடியாதபடி ஒரு முறையோ, இரு முறையோ தூக்குக் கயிறு அறுந்து விழுந்து விட்டது என்று நாட்டு வரலாறுகள் சொல்லும் செய்தியில், ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.