பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 131

மாசில்லாமணித் தேசிகர் என்ற அருட்செல்வர் தருமபுர மடத்தில் தலைமைப் பதவியில் அப்பொழுது இருந்து வந்தார்.

பெற்ற விருதுகளோடும் புலமைச் செருக்கோடும் மாசில்லாமணியாரை வந்து கண்டார் குமரகுருபரர். நல்ல பக்குவ நிலையில் இருந்தும், வழி காட்டுவார் இன்மையால், முகை உடைந்து மணம் பரப்பாத மலரைப் போல இருந்த குமரகுருபரரை எவ்வாறாயினும் பயனுனடயவராகச் செய்ய விரும்பினார் அருளுடைத் தலைவர். பெரிய புராணத்தில் உள்ள ஐந்து பேர் அறிவும் என்ற பாடலுக்கு அனுபவப் பொருள் கூறுமாறு அவர் குமரகுருபரரைக் கேட்டாராம்.

இதுவரை அறிவால் பெறும் பொருள் ஒன்றையே கண்டு அதனையே பெரிதென மதித்து வந்த குமரகுருபரர் திடுக்கிட்டார்; அறிவால் அடையும் கல்வியை அல்லாமல் உணர்வால் பெறும் கல்வியும் உண்டோ என்று வியப்புற்றார்; தம்முடைய கல்வி முழுத்தன்மை பெற்ற தன்று என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தார். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு, என்று குறள் கூறுவது உண்மைதான். ஆனால், அறிவு மட்டும் ஊறினால் போதுமா? மனிதன் முழுத்தன்மை அடைந்து விட முடியுமா? அறிவின் பெருக்கம் தலையின் வீக்கமாகும். அது மட்டும் பெருத்தால் மனிதன் சரியானபடி நிற்க முடியாமல் நிலை குலைய நேரிடும். இன்று அறிவை மட்டும் வளர்த்துக்கொண்டு உலகம் படும் பாட்டைக் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்!

எனவே, தம் குறைபாட்டை நன்கு அறிந்தார் குமரகுருபரர்; உடனே மாசில்லாமணித் தேசிகரின் திருவடி களில் வீழ்ந்து வணங்கித் தாம் பெற்ற பரிசில்களை யெல்லாம் காணிக்கையாக வைத்து விட்டார். * .