பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 25


‘நுண்கலைகள்’ (Fine Arts) எனப்படும் கட்டடம், சிற்பம், ஒவியம், இசை, கவிதை என்ற ஐந்தும் இதனை மிகுதியும் செய்கின்றன. மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்த நம் முன்னோர், இந்த ஐந்து நுண்கலைகளையும் இறைவனுக்கே அர்பணித்தனர். பெருங்கோயில்கள் கட்டிய ஒரு மன்னனாவது தன்னுடைய அரண்மனையைக் கருங்கல்வினால் கட்டியதுண்டா? இல்லையே! எகிப்து நாட்டை ஆட்சி செய்த 'பாரோக்கள்' தம்முடைய சடலத்தைப் புதைக்க, உலகம் வியக்கும் 'பிரமிடு’களைச் சமைத்தார்கள். ஆனால், நம் நாட்டில் கோயில்களைத் தவிர வேறு எதனையும் நிலை பெறும்படி கட்டவே இல்லை. இத்துறையில் நம்மவர்களின் பண்பாட்டை அறிய இன்றுள்ள நமக்குத் தகுதி இன்றேனும், வருங்காலம் உறுதியாக அதனை அறியும் என்பதில் ஐயமில்லை!

கயிலை மலையில் உமையை ஒரு பாகத்தில் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான். காஞ்சீபுரத்தில் அக் கயிலை மலையை ஒத்த ஒரு கோயில் எடுப்பித்து, அதில் இறைவனை நிறுத்த விழைந்தான் இராசசிம்மன். கலைக்கெல்லாம் மூலமான இறைவனுக்கே ஒரு கோயில் எடுக்க வேண்டுமானால், அக்கோயில் எத்துணைக் கலைச் சிறப்புடையதாக இருக்க வேண்டும்! தன் காலத்தில் தமிழ் நாட்டில் எத்துணைக் கலை நுணுக்கம் இருந்ததோ, அத்தனையும் ஒவ்வொரு கோயிலிலும் குடிபுக வேண்டும் என்று முடிவு செய்தான் அப்பல்லவ மன்னன். 'செங்கோலுக்கு மிஞ்சின சங்கீதமா?’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. பல்லவச் சக்கரவர்த்தியே ஒரு முடிவு செய்தால், அதனைக் கொண்டு செலுத்தவா முடியாது?

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் அனைத்திலிருந்தும் சிற்பக் கலைஞர் பலர் காஞ்சிக்கு விரைந்தனர். மன்னனோ, கலை ஆர்வமும் பத்தியும் நிறைந்தவன்; செல்வாக்குக்கோ குறைவில்லை. சிறந்த கலைக்கோயில்