பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 O அ. ச. ஞானசம்பந்தன்


ஆனால், அவ்வாறு நினைப்பதற்குமுன், யார் கூறுவார்கள் என்பதை ஆராய வேண்டும். பழி கூறுபவர்கள் தக்க பெரியவர்களா? நடுவு நிலைமையில் இருந்து நம் தவற்றை எடுத்துக் காட்டுகிறவர்களா? பெரியவர்கள் கூறும் பழிக்குத்தான் அஞ்ச வேண்டுமே தவிர, மற்றையோர் வார்த்தைகட்குச் செவி சாய்க்க வேண்டிய அவசியமே இல்லை. 'உலகம் பழிக்கும் செயலைச் செய்யாதே,' என்றுதான் குறள், புறநானூறு முதலிய நூல்கள் கட்டளையிடுகின்றன. ஆனால், ‘உலகம்’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களையும் அந்தச் சொல் குறிக்கவில்லை. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே,’ என்று நம் முன்னோர் கூறினர்.

உயர்ந்த பெரியவர்கள் பழிக்கக்கூடிய செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட செயல் என்று ஏதாவது தனியாக உண்டா? ஆம்! மனிதன் தன் நிலைமைக்குத் தாழ்வான செயலைச் செய்தால், பெரியோர் பழி கூறுவர். மனிதன் எவ்வளவு இலாபத்தைப் பெறுவதானாலும், பெரியோர் பழிக்கும் செயலைச் செய்யலாகாது என்ற கருத்தைப் புறநானூறு,

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"

என்று கூறுகின்றது. இவ்வுலகமே பரிசாகக் கிடைப்ப தாயினும், அது பழியுடன் வருவதானால், அதனை விரும்பு வதும், பெறுவதும் தவறு என்று கூறுகின்றது அப் பழந்தமிழ் நூல்.

இவ்வாறு பழிக்கு அஞ்சும் பெரியோர் தம்மிடம் ஒரு குற்றமும் இல்லாமல் நடந்துகொள்ள முயல்வர். தம்மையும் மீறிக் குற்றம் நிகழ்ந்துவிடுமாயின் உயிரை விட்டுவிட முயல்வரே தவிர, உயிருடன் இருந்துகொண்டு குற்றத் தால் வரும் பழியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர்கள் குற்றம் என்று நினைப்பதை நம் போன்றவர்கள்