பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 57


பேரறிவால் நீந்திக் கரை கண்டவர் ஆரூரர் என்று சொல்லல் மிகையாகாது. நம்பியாரூரருடைய தேவாரங்களைப் படிக்கின்றவர்கள் அவருடைய கல்விப் பெருக்கத்தை ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். அப்பெரியவர்கள் இறைவனிடம் எவ்வளவு அன்பு கொண்டு இருப்பினும், அவனுடைய திருவருளை எவ்வளவு பெற்றிருப்பினும், தம்முடைய கல்வி வளர்ச்சியைப் பெரிதும் போற்றியிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய பாடல்களைப் படித்தவர்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

சுந்தரமூர்த்திகள் திருக்குறளில் மிக நிறைந்த பயிற்சி உடையவர் என்பதை அவருடைய தேவாரம் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. திருநெல்வாயில் என்ற ஊரில், இறைவன் மேல் சுந்தரமூர்த்திகள் பாடிய பத்துப் பாடல்களில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்; திருக்குறள் கருத்துக்களை மட்டுமல்லாமல், அந்தச் சொற்களையும் அப்படியே ஆட்சி செய்திருக்கிறார். குறளில் இவ்வளவு பயிற்சியுடைய சுந்தரமூர்த்திகள், தம்முடைய குறட் பயிற்சியை வெற்று நூலளவில் மட்டும் காட்டிவிடாமல் வாழ்க்கையிலும் மேற்கொண்டுள்ளார் என்பது அறிந்து மகிழ்வதற்குரியது. அவருடைய வாழ்வு முழுவதிலும் பல இடங்களில் குறள் கண்ட வாழ்வை அவர் மேற் கொண்டார் என்பதை நாம் அறிய முடியும். உதாரணமாக ஒன்று காணலாம்.

சுந்தரமூர்த்திகள் ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடிக்கொண்டு வரும் பழக்கமுடையவர். பண்ணுருட்டிக்குப் பக்கத்திலுள்ள திருவீரட்டானம் என்னும் ஊருக்கு ஒரு முறை சென்றார். சுந்தரமூர்த்திகளுக்கு முற்பட்டவ ராகிய திருநாவுக்கரசர், திருவீரட்டானத்தில் தங்கித் தம்முடைய கையால் அக்கோயில் புல் செதுக்கும்