பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15. உயர்வு உள்ளல் !

சாதாரண வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு, அன்றாடப் பாட்டுக்கே அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற சிலர், திடீரென்று வசதியான வாழ்க்கை வாழத் தகுந்த செல்வத்தைப் பெற்று விடுவதுண்டு. கஷ்டப்பட்ட அவர் இனிக் கவலையில்லாமல் வாழலாம் என்று நம்மைப் போன்றவர்கள் நினைப்போம். ஆனால் வசதி பெற்ற அவர் அவ்வாறு நினைப்பதில்லை. சில காலம் கழித்து அவரைப் பார்த்தால் உடம்பு மெலிந்து, கண் குழி விழுந்து, பேய்போலக் காட்சியளிப்பார். காரணமென்ன? ஓரளவு பொருள் கிடைத்தவுடன் அதனை எப்படியாவது பெருக்கி அதிகப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தினால் முயற்சி செய்யத் தொடங்குகிறார். முயற்சி நல்லதுதான் என்றாலும், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமல், பிறருடைய நன்மை தீமை களைக் கவனியாமல், கருமமே கண்ணாக இருப்பது சரிதானா?

ஆனால் இவ்வளவு முயற்சிக்கும் காரணம் யாது? பொருளைச் சேகரிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கந் தான். அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவு சேகரித்து விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகி விடுகின்றது. அந்தக் குறிக்கோள் நிறைவேறுகின்றவரை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கருமமே.