பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 குறிஞ்சிமலர் யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவதற்குப் பூரணியை அனுப்பி வைக்க வேண்டுமென்று மங்கையர் கழகத்துக் காரியதரிசியைக் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு கடிதம். நான்கு மாதம் கழித்துக் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசியப் பெண்கள் பேரவையில் அவள் தமிழ் நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவேண்டுமென்று கோரியது இன்னொரு கடிதம். தை மாதம் மலாயாவில் கோலாலம்பூரிலுள்ள தமிழர்கள் நடத்தும் பொங்கல் விழாவுக்கு வர வேண்டுமென்று மற்றொரு கடிதத்தில் கேட்டிருந்தது. 'உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்ராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது தான். உடல் நிலைப்பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக்கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால ஓய்வு உனக்கு இருக்கிறது. அது போதுமென்று நினைக்கிறேன். நீ இவைகளில் கலந்து கொண்டால் உனக்கு மட்டுமல்லாமல் நமது கழகத்திற்கும் பெருமை கிடைக்கிறது. ‘பாஸ் போர்ட் (வெளிநாட்டுப் பயண அனுமதி), விசா முதலியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய தாள்களும் இவற்றோடு அனுப்பியுள்ளேன். அவற்றை நிறைவு செய்து கையொப்பமிட்டு அங்கேயே சிறிய அளவில் உனது புகைப்படமும் எடுத்து உடன் அனுப்பி னால் மற்ற ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பங்களை நீ இழக்கக்கூடாது. நன்றாகச் சிந்திந்து முடிவு செய். இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு மீனாட்சி அச்சகத்திலிருந்து உனது கோடைக்கானல் முகவரியைப் பெற்றுக்கொண்டேன்' என்று காரியதரிசி அம்மாள் எழுதி இருந்தாள். - .

இரண்டு மூன்று முறை அந்தக் கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படித்தாள் பூரணி, சிந்தனையில் ஆழ்ந்தாள். கடுமை யான பின்னக்கணக்கில் ஒழுங்காகவும் முழு எண்ணாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/264&oldid=555987" இலிருந்து மீள்விக்கப்பட்டது