பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 குறிஞ்சிமலர் பூரணியின் இந்த வானொலிப் பேச்சு அன்றிரவு அரவிந்தனைப் பெரும் சிந்தனைக்கு ஆளாக்கிற்று. அன்றொரு நாள் கோடைக்கானலில், பூரணியை மணந்து கொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறிய போது நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் ஊண் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்று திருவாசகத்தைக் கூறும்போது என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களில் புகழ்கிறாளா? அல்லது குத்திக் காட்டுகிறாளா? எடுத்துக் கொண்ட பொருளுக்காக இந்தத் தத்துவங்களைச் சொல்லி இப்படிப் பேசுகிறாளா? என்று பலவாறு எண்ணினான் அரவிந்தன். அவளுடைய வானொலிப் பேச்சைக் கேட்ட அன்று மீண்டும் தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் அவளைப் பற்றிச் சில வரிகளை எழுதினான் அவன்; பூரணி! நீ என்னோடு சம உயரத்தில் நின்று சிரித்துப் பொன் காட்டும் நிறமும், பூக்காட்டும் விழிகளுமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, நான் நிற்கிற எல்லை உங்களுக்கு ஒப்பானதில்லை. இன்னும் உயரமானது, உயரமானது என்று கூறுவது போல் மேல் எல்லைக்குப் போய் நின்று பேசி விடுகிறாய் நீ உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில் நீ தான் வெற்றி பெறுவாய் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதுதான் இப்போது என் மனத்தில் மறுபடியும் உறுதிப்படுகிறது. மலை நிலத்தில் பூத்த பூவைத் தரை நிலத்து மனிதன் சூடுவதற்குக் கை எட்டாது போலும்!

இதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிய பின்புதான் அன்றிரவு அவனுக்கு உறக்கம் வந்தது. மறுநாள் காலை ஐந்து மணிக்கு முன்பே அவன் எழுந்து விட்டான். தலைக் கனமும் சளியுமாக உடம்பு வலிப்பது போலிருந்தது. வெந்நீரில் குளித்தால் நல்லது என்று தோன்றியதால் வசந்தா எழுந்திருந்து விட்டாளா என்று பார்க்கக் கீழ்வீட்டுக்குச் சென்றான். கீழ் வீட்டில் யாருமே எழவில்லை. எழுந்த பிறகு வசந்தாவிடம் வெந்நீருக்குச் சொல்லிக் கொள்ளலாமென்று திரும்பிய அரவிந்தன் வெளியி லிருந்து சைக்கிள் மணி ஒலியும் அதையடுத்துச் செய்தித்தாள் சன்னல் வழியாக வீசி எறியப்படும் ஒலியும் கேட்டு நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/446&oldid=556169" இலிருந்து மீள்விக்கப்பட்டது