பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 55

'தேடிச்சோறும் நிதம்தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம் வாடித்துன்பம் மிகவுழன்று பிறர்

வாடப்பல செயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பவ வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?” அப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, வீட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு விழுந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப் போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு - இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஒர் உணர்ச்சிப் பொறியைத் துண்டியது.

நீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஒசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் லாரிகள் போகும் சத்தம் அதிர்ந்து ஒயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களிள் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு. இப்படி எண்ணத்தில் திளைப்பது அவளுக்குப் பழக்கம். 'சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா? துன்பத்தில் உழன்று கொண்டும் பிறரைத் துன்பத்தில் உழல வைத்துக் கொண்டும் வாழ்வது தான் வாழ்க்கையா? பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவது தான் வாழ்க்கையா? இதையெல்லாம் விட பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது. குளிர்த்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்த போது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/57&oldid=555781" இலிருந்து மீள்விக்கப்பட்டது