பக்கம்:குற்றால வளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வகுப்பு


தைரியமாக முன்வரவேண்டும். இந்நாள் நாட்டிலிருக்கும் வகுப்புச் சண்டைகளை ஒழிப்பதற்குப் பொருளற்ற வகுப்புப் பிரிவைத் தொலைத்தலே வழியாகும். எதினும் அச்சங் கொள்தல் ஆகாது. உளவலிகொண்டு முன் வரல் வேண்டும். இன்னோரன்ன காரியங்களில் தலையிடுவார், உயிரை எவரானும் அழிக்க இயலாதென்ற உண்மையை உணர்தல்வேண்டும். அன்பர்கள் இரண்டு பொருள்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். உடல் அழிவுள்ளது என்பது ஒன்று; உயிர் அழிவற்றது. என்பது மற்றொன்று. அழிவில்லாததை எவராலும் அழிக்கமுடியாது. அழிவுள்ளதை என்றும் காத்து வைத்துக்கொள்ளவும் முடியாது. அழிவுள்ளது என்றேனும் அழிந்தே தீரும். அழிவில்லாதது என்றும் அழியாது. எனவே, அழிதன் மாலையவாய உடலைவிட அஞ்சவேண்டுவதே இல்லை. உடல் அழிவுள்ளது என்பதுபற்றி நீண்டு விளக்கவேண்டிய அவசியம் இல்லை. நெருனல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமையுடையது இவ்வுலகு. "செத்துக்கிடக்கும் பிணத்தருக்கே இனிச்சாப் பிணங்கள் கத்துக் கணக்கென்ன கண்டீர்" என்றார் பட்டினத்தடிகள். "செத்தாரைச் சாவார் சுமந்து என்றார்". நாலடியில், அன்றி இதற்குச் செய்யுட் சான்றே வேண்டுவதின்று. நாள்தோறும் நடைமுறையில் பார்க்கின்றோம், நின்றான் இருந்தான் கிடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/105&oldid=1322951" இலிருந்து மீள்விக்கப்பட்டது