பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 5.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

எனதன்புள்ள குழந்தைகளே,

இந்தியா சுதந்தரம் அடைந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. கலைக்களஞ்சியம் வெளியிடும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கும் இது வெள்ளி விழா ஆண்டாகும். குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் இதுவரை வெளிவந்துள்ள நான்கு தொகுதிகளைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். வெள்ளிவிழா ஆண்டில் வெளிவரும் இது ஐந்தாம் தொகுதியாகும். இதில் தேசீயகீதம் பற்றியும், தேசிய ராணுவப் பயிற்சிப்படை பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லியைப் பற்றி இதில் கட்டுரை உள்ளது.

இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரைப் பற்றியும், குழந்தைகளுக்காகப் பல நல்ல கவிதைகளை இயற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றியும் இதில் காணலாம்.

தனிமம் என்ற சொல் எல்லாத் தொகுதிகளிலும் கட்டுரைகளில் பல வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதைப்பற்றிய விளக்கமான ஒரு கட்டுரை இந்தத் தொகுதியில் இடம் பெறுகிறது.

தாவரங்களைப் பற்றி ஒரு பொதுக்கட்டுரையும், தொற்றுத் தாவரங்கள், நச்சுத் தாவரங்கள் பற்றித் தனித்தனியாகவும் இத்தொகுதியில் கட்டுரைகள் உள்ளன. மிகப் பெரிய விலங்கான திமிங்கிலத்தைப் பற்றியும், தவளை, தேரை, தேள், தேனீ, நண்டு, நத்தை முதலியவை பற்றியும், டோடோ, தையற்சிட்டு ஆகிய பறவைகள் பற்றியும் இதில் நீங்கள் படிக்கலாம். தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தட்டெழுத்துப்பொறி, தையல் எந்திரம் இவை பற்றியெல்லாம் படங்களுடன் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

தமிழ் மொழி, தமிழ்ச் சங்கங்கள், தமிழ்நாடு பற்றியெல்லாம் இதில் தனித்தனியே கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிற்குப் பெருமை தரும் திருக்குறள் பற்றியும், அதை இயற்றிய திருவள்ளுவரைப் பற்றியும் இதில் குறிப்புகள் உள்ளன. மிகப் பழமையான தமிழ் நூலாகிய தொல்காப்பியம் பற்றியும் இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

டால்ட்டன் என்ற விஞ்ஞானியைப் பற்றிய கட்டுரையில் தொடங்கி, நாணயங்கள் என்ற கட்டுரை முடிய இதில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் விளக்கப் படங்களுடன் இடம் பெறுகின்றன. உங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள இத்தொகுதியும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.


பல்கலைக்கழகக் கட்டடம்,

தி.சு. அவினாசிலிங்கம்

சென்னை-5.

தலைவர்,

20-9-1972

தமிழ் வளர்ச்சிக் கழகம்