பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை எனதன்புள்ள குழந்தைகளே ! குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஏழு தொகுதிகளைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். இது எட்டாம் தொகுதி. உலகிலுள்ள உயிரினங்களில் முதன்மை பெற்று விளங்கும் மனிதனைப் பற்றிய கட்டுரை இதில் உள்ளது. மனிதனின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் கூறும் மானிடவியல் என்னும் கட்டுரையும் இதில் இடம் பெறுகின்றது. மனிதன் தன்னுடைய அறிவாற்றலினால் அரியதொரு கலையாக வளர்த் துள்ள மொழி பற்றியும் இத்தொகுதியில் அறிந்துகொள்ளலாம். உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் முதுகெலும்புள்ள உயிரினங்கள், முதுகெலும்பில்லா உயிரினங்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். இவ்விரு பிரிவுகள் பற்றியும் இதில் தனித்தனியே கட்டுரைகளைக் காணலாம். அறிவியலின் ஒரு துறையாகிய ரசாயனத்தைப் பற்றியும், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் சின்னமாக விளங்கும் மின்சாரத்தைக் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ரெயில்கள் பற்றியும் இதில் தெரிந்து கொள்ளலாம். உலகப்புகழ்பெற்ற சிற்பங்களைக் கொண்ட மாமல்லபுரம் பற்றிப் பல படங்களுடன் இத்தொகுதியில் கட்டுரை உள்ளது. கவியரசர் ரவீந்திரநாத டாகுர், அறிவியல் அறிஞர் சர் சீ.வீ. ராமன் இருவரும் நோபெல் பரிசு பெற்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள்; அவர்களைப் பற்றி இத்தொகுதியில் அறிந்து கொள்ளலாம். அவர்களைப்போல் நீங்களும் அறிவால் உயர்ந்து, பிறந்த பொன்னாட்டுக்குப் புகழ்தேடித் தருவீர்கள் என நம்புகிறேன். காகிதம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ள இந்தக் காலத் திலும் நல்ல காகிதத்தில் கண்கவரும் முறையில் வண்ணப் படங்களுடனும், விளக்கப் படங்களுடனும் இத்தொகுதி அச்சிடப்பட்டுள்ளதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் அறிவும் திறமையும் மேன்மேலும் வளர இத்தொகுதியும் உறுதுணையாக இருக்குமென நம்புகிறேன்.

பல்கலைக்கழகக் கட்டடம் சென்னை 600005 2-10-1974) தி. சு. அவினாசிலிங்கம் தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம்