பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

31

எலியும் முயலும் ஒரு மாதந்தான். பூனையும் நாயும் இரண்டு மாதங்கள். ஆடு ஐந்து மாதம். கன்றுக்குட்டிக்குத்தான் நம்மைப்போல் பத்து மாதங்கள். குதிரை ஒரு வருஷம். யானை இரண்டு வருஷம்.

பாப்பா:- அப்பா! இதெல்லாம் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அப்பா! இப்படி வித்தியாசமான காலம் தங்குகின்றனவே. அப்படியானால் அவைகள் உள்ளேயிருந்து வளர்வதும் வித்தியாசமாகவே இருக்குமோ அப்பா!

அப்பா:- அம்மா! ஆரம்பத்தில் நீயும் தங்கச்சியும் வளர்ந்த மாதிரியேதான் அவைகளும் வளர்கின்றன. அப்பொழுது அவைகளைப் பார்த்தால் எல்லாம் ஒன்று போலவேதான் தோன்றும். ஆனால் நாள் ஆகஆக அவைகள் சிறிது சிறிதாக மாறிக்கொண்டேவரும். கடைசியில், பிறக்கும்பொழுதுதான் இன்ன இன்ன பிராணி என்பது தெளிவாகத் தெரியும்.

பாப்பா:- அதுசரி அப்பா! ஆனால் அங்கே வயிற்றுக்குள்ளே இருப்பது: கஷ்டமாக இருக்காதா? அங்கே விளையாட முடியாதல்லவா?

அப்பா:- அம்மா! அங்கே தங்கச்சிக்குக் கஷ்டமே கிடையாது. அங்கே அவளுக்கு வெயில் படாது, குளிர் அடிக்காது, அவ்வப்பொழுது ஆகாரம் வந்துகொண்டிருக்கும். தங்கச்சி வளர்ந்து ஆறுமாதம் ஆனபிறகு அவள் அங்கே அப்படியும் இப்படியும் திரும்பி விளையாடவும் செய்வாள். ஆனால் அம்மாவுக்குத்தான் கஷ்டம். ஏதாவது ஒரு வஸ்துவை நாம் நம்முடைய வயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொண்டால் நமக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும். கொஞ்ச நேரம் கட்டிக் கொண்டாலுங்கூடக் கஷ்டமாயிருக்கிறதே, அப்படியிருக்கத் தங்கச்சியை இரவும் பகலும் சதா காலமும் அடிவயிற்றில் சுமந்து கொண்டிருப்பது அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும் யோசித்துப்பார்.