பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


54. பார் பார்

வகுப்பறைக்குள் இருக்கின்ற கரும்பலகையில், ஒரு படத்தைத் தொங்கவிடவேண்டும். அந்தப் படமானது, அதிகமான பொருட்களையும், அதிகமான நிகழ்ச்சி களையும் குறித்துக் காட்டுவதாக இருக்கவேண்டும்.

அனைவரையும் படத்தின் அருகிலே போய் நிற்கச் செய்து, 30 வினாடிகள் வரை, எல்லாவற்றையும் ஊன்றி, உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்து நினைவில் ஏற்றிக் கொள்ளுமாறு அறிவிக்க வேண்டும்.

பிறகு, படத்தை மூடிவிட வேண்டும். அல்லது கழற்றி வைத்துவிடலாம்.

பின்னர், ஆசிரியர் அந்தப்படத்திலுள்ளவைகளைப் பற்றி ஒவ்வொரு கேள்வியாக கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு உண்டு.

சரியான பதிலை அதிக முறைகள் சொல்பவரே இந்த விளையாட்டில் வெற்றி பெறுகிறவராவார்.

55. கை! கை!!

மாணவர்களை நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்த பிறகு, வகுப்பின் ஒரு மூலையில், திரைச்சீலை ஒன்றைக் கட்டி வைக்க வேண்டும்.

ஒரு குழுவிலுள்ளவர்களை அழைத்து, அந்தத் திரைச் சீலைக்குட்புறம் சென்று மறைந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும்.