பக்கம்:கேரக்டர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அம்மாள் ஹஸ்பெண்ட்' என்றுதான் சொல்லுவார்கள். தம்மை அவ்வாறு அழைப்பதில்தான் அவருக்கும் திருப்தி!

தம் மனைவியைப்பற்றியோ அவருடைய அதிருஷ்டத்தைப் பற்றியோ அவர் பேச ஆரம்பித்துவிட்டால் முகத்தில் பெருமை கூத்தாட மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார் அவர்.

"எல்லாம் அவளுடைய அதிருஷ்டம்தான், ஸார்! நான் என்ன செய்தேன்? வக்கீலுக்குப் படித்துப் பாஸ் பண்ணினேன். அவளுக்குத் தாலி கட்டினேன். அவ்வளவுதான்; படிப்படியா முன்னுக்கு வந்தேன். இந்த ஸப் ஜட்ஜ் உத்தியோகம். கார், பங்களா எல்லாம் அவள் அதிர்ஷ்டத்துக்கு ஏற்பட்டதுதான்" என்பார் மகிழ்ச்சியுடன்.

உத்தியோகத்தில் பணம் சேர்த்து, பங்களா கட்டியதும் அந்தப் புதிய பங்களாவுக்கு 'ஜானகி நிவாஸ்' என்று தம் மனைவியின் பெயரையே சூட்டினார்.

"ஜானகி! இன்றைக்குக் கோர்ட்டுக்கு எந்த டிரஸ் போட்டுக்கொண்டு போகட்டும்? ஜானகி, இன்றைக்கு எத்தனை மணிக்கு மாத்திரை சாப்பிடட்டும்?" என்று மனைவியின் அபிப்பிராயத்தைக் கேட்காமல் எதையுமே செய்ய மாட்டார். இப்படி எதற்கெடுத்தாலும் ஜானகி நாமஸ்மரணந்தான் அவருக்கு!

அந்தப் பங்களா வாசலில் பிச்சைக்காரர்கள் வந்தால், "ஐயா" என்று அழைக்கமாட்டார்கள். “அம்மா, தாயே" என்றுதான் கூப்பிட்டுக்கொண்டு வருவார்கள். 'ஐயா' என்று கூப்பிடாமல் 'அம்மா' என்று கூப்பிடும் பிச்சைக்காரர்களை அவர் மனத்துக்குள்ளாகவே 'புத்திசாலிகள்' என்று எண்ணிப் பாராட்டுவார்.

யாராவது 'யாசகம்', 'டொனேஷன்' என்று வந்தால் சாம்பசிவம் அவர்களிடம் "அம்மாவைப் பார்க்க வந்தீர்களா? உள்ளே இருக்காங்க; போய்ப் பாருங்க" என்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/102&oldid=1481080" இலிருந்து மீள்விக்கப்பட்டது