பக்கம்:கேரக்டர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

"சரி!" என்பார் அவர்;

கச்சேரியில் போய் உட்கார்ந்துகொண்டு தம் மனைவி தலையாட்டுகிற இடங்களையெல்லாம் கவனித்து அந்த இடங்களில் தாமும் ரசிப்பதுபோல் பாவனை செய்வார்.

சாம்பசிவம் வீட்டில் எப்போதும் குழந்தைகளும் குட்டிகளும் ஜேஜே என்று இருக்கும். எல்லாம் ஜானகி அம்மாளின் உறவுக்காரர்கள்தான். சாம்சிவத்துக்குத் தம்முடைய உறவினர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துவரத்தைரியம் ஏது? மனைவி வகை பந்துக்களின் குழந்தைகள் அழுதால்கூட அவருக்குக் கோபிக்க உரிமை கிடையாது. குழந்தைகளின் தொந்தரவு அதிகமாகப் போனால், "சும்மா இருக்கப் போகிறீர்களா? இல்லே, 'அம்மா'வைக் கூப்பிடட்டுமா?" என்றுதான் மிரட்டுவார்.

"ஜானகி! இந்த வருஷம் ஸம்மருக்கு நாம் ஊட்டிக்குப் போகலாமா?" என்று தயங்கியபடியே கேட்பார்.

"நீங்க ஒண்ணும் வேண்டாம்; உங்களுக்கு ஆஸ்துமா, உடம்புக்கு ஒத்துக்காது. இந்த வருஷம் நானும் என் தம்பியும் போயிட்டு வரோம். நீங்க பங்களாவைப் பார்த்துக்குங்க..." என்பாள் அந்த அம்மாள்.

"சரி, நீ சொல்றதும் சரிதான். ஆஸ்துமா அதிகமாயிடுத்துன்னா யார் கஷ்டப்படறது? நான் பங்களாவைப் பார்த்துக்கறேன். நீ ஜாக்கிரதையாப் போயிட்டுவா. மப்ளர், பிளானல், சட்டை, போர்வையெல்லாம் ஞாபகமா எடுத்துக்கொண்டு போ" என்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/104&oldid=1481082" இலிருந்து மீள்விக்கப்பட்டது