பக்கம்:கேரக்டர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

என்ன பிரயோசனம்?" என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான்; அண்ணாசாமிக்கு எங்கிருந்தோ ஓர் ஆவேசம் பிறந்துவிடும்.

"இது என்ன அக்கிரமம், ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப்போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ' வாம்! இந்த அழகிலே காவேரி வாட்டரை மெட்ராஸுக்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்!" என்பார் அண்ணாசாமி.

"கிருஷ்ணா நதியைக் கொண்டுவரப் போறதா ஒரு 'ஸ்கீம்' இருந்துதே,அது என்ன ஆச்சு?" என்று மெதுவாகக் காவேரியிலிருந்து கிருஷ்ணாவுக்குத் தாண்டுவார் சந்தனப் பொட்டுக்காரர்.

"ஸ்கீமுக்கு என்னங்காணும்? ஆயிரம் ஸ்கீம் போடலாம்! சி.பி.யும், சீனிவாசய்யங்காரும் போடாத ஸ்கீமா இவன் பெரிசா போட்டுடப் போறான்? பணத்துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம்! கன்னா பின்னான்னு கடனை வாங்கி, தண்ணி இல்லாத இடத்திலெல்லாம் டாமைக் சுட்டிண்டிருக்கான். கேட்டா, 'இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்'புங்கறான். ஐக்கும், குருஷேவும் எதுககுத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன்! இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும் பார்த்துண்டே இரும். நான் இன்னிக்குச் சொல்றேன். குருஷ் சேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா, அசகாய சூரன்!"

"அதிருக்கட்டும்; எவரெஸ்ட் எவருக்கு சொந்தம்னு தீர்மானமாயிடுத்தா?"

"பரமசிவனுக்குத்தான்; போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம் விருந்து வெச்சுண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிபன்ஸ் வேறே! டிபன்ஸ் மினிஸ்டர் வேறே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/106&oldid=1481084" இலிருந்து மீள்விக்கப்பட்டது