பக்கம்:கேரக்டர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கம்பளி, வேர்க்கடலை, நாமக்கட்டி——இவைதான் அவருடைய ஆஸ்தி. பகலெல்லாம் சுற்றிவிட்டு இரவில் ஏதாவது ஒரு மரத்தின் கீழோ, சத்திரத்துத் திண்ணையிலோ போய்ப் படுத்துக்கொள்வார். அதுவும் இஷ்டமிருந்தால் தான். இல்லை யென்றால் அதுவும் இல்லைதான். இந்த உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் 'தாமரை இலைத் தண்ணீர்போல்' வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துறவி அவர்.

பொழுது விடியும் முன்பே ஆற்றிலோ, குளத்திலோ இறங்கித் தலை முழுகிவிட்டு அந்த நாலுமுழக் காவித் துண்டையும் துவைத்து உலர்த்திக் கட்டிக்கொண்டு பரந்த நெற்றி முழுதும் பட்டை நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொள்வார்.

பிறகு, ஊருக்குள் சென்று ஏதாவது ஒரு கிளப்புக்குள் நுழைந்து, "ஆண்டலனே, இந்தக் கட்டைக்கு என்ன கொடுக்கிறீங்க?" என்று கேட்பார். இரண்டு இட்டிலியும் ஒரு கப் டீயும்தான் அவருடைய காலை ஆகாரம் என்பது கிளப்புக்காரர்களுக்குத் தெரியும்.

ஆகாரம் முடிந்ததும் அதற்குண்டான காசைக் கொடுத்து விட்டு, கடைத்தெருப் பக்கம் கிளம்பிவிடுவார் சாமியார். போகும்போதே காலிச் சுவர் சுண்ணில் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டுதான் போவார்.

பள்ளிக்கூடச் சுவர், கோயில் மதில் சுவர், முனிசிபாலிடிச் சுவர் இப்படி எத்தனை சுவர்கள் இல்லை? ஏதாவது ஒன்று அவருக்கு அகப்பட்டுவிடும். அவ்வளவுதான், பையிலுள்ள காவிக் கட்டிகளை எடுத்துத் தண்ணீரில் குழைத்துக் குச்சி மட்டையைக் கொண்டு சுவரில் அநுமார் சித்திரம் எழுத ஆரம்பித்துவிடுவார். அநுமார் சித்திரம் என்றால் அதில் எத்தனை எத்தனையோ வகை!

சஞ்சீவி பர்வதத்துடன் பறக்கும் அநுமார்!

விசுவ ரூப தரிசன அநுமார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/132&oldid=1481172" இலிருந்து மீள்விக்கப்பட்டது