பக்கம்:கேரக்டர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

என்று குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்டு வேலை சொல்பவர்களைத் திணற அடிப்பான். காலையில் தண்டையார்ப் பேட்டைக்குப் போய்வர வேண்டும் என்று யாராவது சொன்னால் மாலையில்தான் கிளம்புவான். ஆபீசில் உள்ள அத்தனை பேர்களிடமும் போய், "அக்கௌண்டண்ட் ஒரு வேலையா என்னைத் தண்டையார்ப்பேட்டைக்கு அனுப்பறாரு. இன்னும் யாருக்காவது தண்டையார்ப்பேட்டையில் வேலை இருந்தால் சொல்லுங்கள்; ஒரே அடியா முடிச்சுக்கிட்டு வந்துடறேன்" என்று தண்டோரா போடுவான்.

கடைசியில் மாலையிலும் போகமாட்டான். கேட்டால் சைக்கிள் பஞ்ச்சர்; பஸ் ஸ்டிரைக்" என்று ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு, பைல் அறையில் போய் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பான்.

"ஏண்டா,ஆறுமுகம்! உன்னை எங்கேடா நாலு நாளாய்க் காணோம்?" என்பார் அக்கௌண்டண்ட்.

"லீவு போட்டிருந்தேனே, சார்! தெரியாது உங்களுக்கு?"

"லீவு போட்டால் சொல்லிட்டுப் போறதில்லையா?"

"உங்களை வந்து பார்த்தேன், சார்! நீங்க மேஜைமேலே சாஞ்சபடியே லேசாத் தூங்கிக்கிட்டிருந்தீங்க. சரிதான் அப்படின்னுட்டு 'பெல்'லை மட்டும் எடுத்துப் பூட்டி வச்சுட்டுப் போயிட்டேன், சார்! நான் இல்லாதப்போ அது எதுக்கு சார், இங்கே? பெல் இல்லாததுலேருந்தே நான் லீவிலே இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டிருக்கலாமே. நீங்க!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/24&oldid=1478769" இலிருந்து மீள்விக்கப்பட்டது