பக்கம்:கேரக்டர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

"டேய். அல்டாப்! உனக்கு வெக்கறேன் இருடா 'வேலை'ன்னு சொல்லிக்கினே சைக்கிள்ளே குந்திக்கினு பறந்துட்டான் அந்தத் துடை நடுங்கி!

"போடா கய்தே! எங்கிட்டே ஒரு கும்மாகுத்து தாங்குவியா நீ...உனக்கு ஓர் அடையாளம் பண்ணி வெக்கறேன் இரு'ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன். பாவம், அந்தப் பொண்ணு மொகத்தைப் பார்த்தேன்; அப்படியே மனசு எளகிடுச்சுப்பா! நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா? செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே துட்டு வாங்கிக்கினு பள்ளிக்கூடம் போற பையன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே அது இன்னா போக்யதை...? அடடே! அந்தக் கதை தெரியாதா உனக்கு? சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தௌஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன் தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன் கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும், துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது? அவனைச் சும்மா உடலாமா? இது ஒரு பொழைப்பா? இன்னைக்கு ஆவட்டும்... அவனுக்கு வெக்கறேன் வேலை!"

        ✽                ✽                   ✽                  ✽

சினிமாக் கொட்டகை வாசலில் ஒரு பெரிய கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/28&oldid=1478825" இலிருந்து மீள்விக்கப்பட்டது