பக்கம்:கேரக்டர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அவ்வளவுதான்; வேளா வேளைக்குச் சாப்பாடு, காப்பி எல்லாம் அப்பர் பர்த்திலேயேதான். எதற்கும் கீழே இறங்க மாட்டார். மேலிருந்தபடியே கீழே உட்கார்ந்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்துத் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் திறமை அவருக்கு உண்டு.

நாலைந்து ஸ்டேஷன்கள் போவதற்குள் கீழே உட்கார்ந்திருப்பவர்கள் யார் யார், அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது பொன்ற எல்லா விவரங்களையும் அறிந்துகொண்டு விடுவார்.

மேலே இருந்தபடியே அவருக்கு எல்லாம் தெரியும். எப்போதாவது கீழே இறங்கவேண்டுமானால் டக்கென்று லாகவமாகக் காலைக் கீழே வைப்பார். அப்படி வைக்கும்போதே தயாராக இருக்கும் அவருடைய பாதரட்சைகள் இரண்டும் அவர் பாதங்களை ஏந்திக்கொள்ளும். அவ்வளவு அநுபவம் ரயில் பயணத்தில்!

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் போய் நிற்குமுன்னரே, "இதென்ன ஓங்கோலா? இதென்ன நாக்பூரா? இதென்ன குவாலியரா?" என்று கேட்டுக்கொண்டிருப்பார். கீழே இருப்பவர்கள் வெளியே எட்டிப் பார்த்தால் அவர் சொல்கிறபடியே எல்லா ஸ்டேஷன்களும் டக் டக் என்று வந்துகொண்டிருக்கும். "அடுத்தாற்போல் வார்தா ஸ்டேஷன் வரப்போகிறது; அங்கே ஆரஞ்சு மலிவு!" என்பார். வார்தாவும் வரும். ஆரஞ்சு வண்டியும் வரும்; மலிவாகவும் கிடைக்கும்!

அவர் ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வைத்துக்கொண்டு அப்பர் பர்த்திலிருந்தபடியே அவற்றைச் சாப்பிடும் அழகே தனி. ஆரஞ்சுத் தோலைக் கிண்ணம்போல் உரித்து வைத்துக்கொண்டு விதைகளை அந்தக் கிண்ணத்தில் துப்பிக்கொள்வார். பிறகு அதை அப்பர் பர்த்திலிருந்தபடியே லாகவமாக யார்மீதும் படாமல் ஜன்னலுக்கு வெளியே வீசிவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/38&oldid=1478956" இலிருந்து மீள்விக்கப்பட்டது