பக்கம்:கேரக்டர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

"ஆமா; அவனேதான். ராத்திரி செகண்ட் ஷோ பாத்துட்டு சைக்கிள்ளே வரேன். மூலகோத்ரம் வழியா புளியாத் தோப்புலே உழுந்து பாராவதி மேலே மெதிக்கிறேன். இவன் குறுக்கே வந்து மறிச்சிக்கனாம்பா!"

"எந்த பாராவதி? அம்பட்டன் பாராவதியா. இல்லே பலகை பாராவதியா?"

"அட, ஆர்ரா இவன் ஒருத்தன், ஏடாகூடம்... ஓட்டேரி பாராவதிப்பா..."

"உம்: அப்பாலே...?"

"அப்பாலே இன்னா? வா, டேசனுக்குங்கறான்."

"எதுக்கு?"

"சைக்கிள்ளே லைட் இல்லியாம்! இவன் எப்டி இருந்த ஆளு? என்னைப் பார்த்து டேசனுக்கு வான்னு கூப்படறாம்பா? கேட்டுக்கினியா கதையை? போன வெசாயக் கிழமை ரெண்டு ரூபா கைமாத்துக் கேட்டான். இல்லேப்பாண்னேன். அந்த ஆத்திரம்போல இருக்குது; கேசு புடிக்கிறாரு எம்மேலே.. 'காத்துலே லைட் அணைஞ்சு போச்சு, இன்னங்கூட சூடு ஆறல்லே'ன்னு சொன்னேன். கேக்கலே. அவன் கையைப் புடிச்சு 'சுடச் சுட' லைட்மேலே வெச்சு 'பாத்துக்கினியா'ன்னேன். கையைச் சுட்டுக்கினு லபோ திபோன்னு கத்தறான்."

"அப்புறம்...?"

"அப்புறம் இன்னா? எங்கிட்டே விளையாட்னானா? கையைச் சுட்டுக்கினு மரியாதையா நவந்துட்டான்...ஆவட்டும், நீ தாயத்தை உருட்டு..."

உருட்டிய தாயக்கட்டை, ஓடுகிற ரயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! துளசிங்கம் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்திவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/42&oldid=1479097" இலிருந்து மீள்விக்கப்பட்டது