பக்கம்:கேரக்டர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



78

"டிரைவர்? நாளைக்குக் கல்கத்தா போகணும். ஸ்டேஷனுக்குப் போய் மெயில்லே மூணு பஸ்ட் கிளாஸ் ஸீட் ரிசர்ல் பண்ணிண்டு வா..." இதற்குள் சாமளா ஓடிவந்து, "அம்மா, அம்மா, எனக்கு டென் ருபீஸ் வேணும், கான்வெண்ட்லே 'மதர்ஸ் டே'யாம்" என்றாள்.

"சரி,சங்கரன்கிட்டே வாங்கிண்டு போ! நாளைக்கு கல்கத்தா போகணும். ஸ்கூல்லே லீவு போட்டுட்டு வாடி!..."

அட்வகேட் கோர்ட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். "நாளைக்குக் கல்கத்தா போகணும். டிக்கட் புக் பண்ணியாச்சு. அப்புறம் கேஸ் கீஸ்னு சொல்லாதீங்கோ..."


கல்கத்தாவில் அவள் தங்கையின் பெண்ணுக்குக் கலியாணம். கலியாணத்தில் எல்லோரும் சாரதாம்பாளையே வந்துவந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். "என்ன மாமி! சௌக்கியமா?" என்று கேட்டவர்களுக்கெல்லாம், “எனக்கு இந்தக் கல்கத்தா க்ளைமேட்டே ஒத்துக்கலை. கலியாணம் முடிஞ்சதும் மெட்ராஸுக்குப் போகணும்" என்று பதில் கூறிக் கொண்டிருந்தாள். தெரிந்தவர்களையெல்லாம் அருகில் அழைத்து ஒவ்வொருவரிடமும் தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொண் டிருந்தாள். சாமளாவைக் காட்டி, "இவள் உங்க பெண்ணா?” என்று யாராவது விசாரித்தால், "ஆமாம்; டான்ஸ் கத்துண்டிருக்கா. கான்வெண்டிலே வாசிக்கிறா. அவளுக்கு இப்பத்தான் 'டான்ஸில்' ஆபரேஷன் ஆச்சு" என்பாள்.

"நீங்க காப்பி சாப்பிடலையா?" என்று கேட்டால். "நான் காப்பியே குடிக்கிறதில்லை. எனக்கு ஷுகர் இருக்காம் சாப்பிடக் கூடாதுன்னுட்டார் டாக்டர். அடிக்கடி பிளட் பிரஷர் வேறே அதிகமாயிடறது. வெயிலே தாங்க மாட்டேங்கறது. போன வருஷம் ஊட்டிக்குப் போயிருந்தேன். அதுக்கு முன் வருஷம் கோடைக்கானல். இந்த வருஷம் சிம்லாவுக்குப் போகணும்னு சொல்லிண்டிருக்கேன். அவரானால் டார்ஜீலிங் போகலாங்கறார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/78&oldid=1479477" இலிருந்து மீள்விக்கப்பட்டது