பக்கம்:கேரக்டர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஏண்டா, உன் சிநேகிதரை எப்படி மகாபலிபுரம் அழைச்சுண்டு போகப்போறே? திருப்போரூர் வழியாப் போடா; ஆறு மைல் ஸேவ் ஆகும். திருக்கழுக்குன்றம் வழியாப்போனால் நாற்பத் திரண்டு மைல் ஆறது. வீணாச் சுத்தாதே!" என்று தமக்குத் தெரிந்த புள்ளி விவரங்களையெல்லாம் சொல்லி ஆளைத் திணற அடித்துவிடுவார்.

புள்ளி சுப்புடு வெளியில் போகாத நேரங்களில் வீட்டுக்குள் உட்கார்ந்து ஏதேனும் ஜாதக ஆராய்ச்சியிலோ, வேறு கணக்கு ஆராய்ச்சியிலோ தீவிரமாக ஈடுபட்டிருப்பார். அவருக்கு எதிரில் ஜாதகங்கள், குறிப்புகள், ரயில்வே கைடு, பஞ்சாங்கம், சிலேட்டு, பலப்பம் இத்தனையும் இருக்கும்.

கடந்த அறுபது வருடங்களில் நிகழ்ந்த சந்திர கிரகணங்கள் எத்தனை? ஒவ்வொன்றும் எத்தனை மணி, எத்தனை நிமிஷ நேரம் நீடித்தது?——இப்படி எத்தனை எத்தனையோ கணக்குகள், ஆராய்ச்சிகள்!

"யாருடா, சாமிநாதனா?...வாடா,வா. இப்ப எங்கேடா உத்தியோகம்? எல்.ஐ.சி.யிலா? அந்தப் பதிமூணு அடுக்கு மாடியிலா? நீ எத்தனாவது மாடி? ஏண்டா அந்தக் கட்டடத்துக்கு ஒரு கோடியே சொச்சம் ரூபாய் செலவுன்னு சுணக்குச் சொல்றாளே, பிகர் கரெக்டாயிருக்குமோ? எண்பத்தெட்டு லட்சத்து எழுபத்தேழாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு ரூபாய் அறுபத்தேழு பைசான்னு எனக்கு ஞாபகம் போகட்டும்; நமக்கென்ன?

"நீ இன்னிக்குப் பேப்பரைப் பார்த்தயோ? மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே விவசாயத்துக்கு எண்ணூறு கோடி ரூபாய் சாங்ஷன் செய்யணும்னு திட்டக்கமிஷனைக் கேட்டிருக்காளாம். அதுவே போதாதாம்! ஆமாம்; அது எப்படிப் போதும்? பாபுலேஷன் நாளுக்கு நாள் அதிகமாயிண்டு இருக்கோன்னோ?

"நல்லவேளை! இந்தச் சங்கடத்துக்கெல்லாம் இல்லாமல் நான் தப்பிச்சு வந்துட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/8&oldid=1478054" இலிருந்து மீள்விக்கப்பட்டது