பக்கம்:கேரக்டர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தெருவில் போகும்போது அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போக மாட்டான். கீழே ஏதாவது கிடக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டு செல்வான். ஆணி, குடைக் கம்பி, இரும்புத் துண்டு எது கிடைத்தபோதிலும் அவற்றைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டுவந்து சேர்ப்பான்.

சின்னசாமி குற்றாலத்துக்குப் போகும் போதுதான் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். காரணம், குற்றாலம் அருவியில் எண்ணெய் ஸ்நானம் செய்வதென்றால் சீயக்காய்த் தூளுக்குச் செலவு கிடையாதல்லவா?

சின்னசாமியிடம் வெகு காலமாக ஒரு பழைய டைம்பீஸ் இருந்தது. ரயில் தண்டவாளத்தில் வைத்து நசுக்கி மோட்சம் கொடுக்கவேண்டிய அந்த வஸ்துவை அவன் தானாகவே ரிப்பேர் செய்து எப்படியோ ஓட வைத்துவிட்டான்.

கடிகாரம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களையும், கடியாரத்துக்கு வேண்டிய ஸ்பிரிங் முதலிய கருவிகளையும் எங்கெங்கோ அலைந்து கடை கடையாகத் தேடி, பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்தான்.

ஒரு சனிக்கிழமை அந்தக் கடியாரத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து எதிரில் பரப்பிக்கொண்டான். ஏதோ ஒரு ஸ்பிரிங்கை எடுத்து மாட்டினான். அதிலிருந்த பல் சக்கரங்களை கழற்றினான். வேறு இரண்டைப் பொருத்தினான், கடைசியில் பழையபடியே கடியாரத்தை மூடிச் சாவி கொடுத்து ஓட்டினான். சுடியாரம் ஓடத் தொடங்கிவிட்டது! ஆனால், என்ன ஆச்சரியம்! சாமான்களில் நாலு மிஞ்சிவிட்டன. அப்படியும் கடியாரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது! சின்னசாமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாமான்களிலும் நாலு மிஞ்சி, கடியாரமும் ஓடினால் மகிழ்ச்சி இருக்காதா?"

ஜெர்மன் டைம்பீஸ்; இப்போதெல்லாம் இந்த மாடல் வருவது கிடையாது, விலை கொடுத்தாலும் கிடைக்காது என்று பெருமையோடு சொல்லி மகிழ்ந்துகொண்டான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/88&oldid=1479759" இலிருந்து மீள்விக்கப்பட்டது