பக்கம்:கேரக்டர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'டவாலி' ரங்கசாமி

"வா ஸார்! எங்கே ஸார் ரொம்ப நாளா காணோம்? கவெக்டரையா பார்க்கணும்? தாராளமாப் போய்ப் பாரு ஸார்...இது இன்னா பேஜார் புடிச்ச பொளைப்பு! அந்தக் காலம் போல வராது ஸார்! என் காலத்திலே எத்தினி கலெக்டருங்களை பார்த்திருப்பேன்! நெல்சன்துரை, ஸ்டோன் துரை, எமர்சன் துரை, நார்ட்டன் துரை, ஆலிவ் துரை!

“எம்டன் குண்டு போட்டான் பாரு. ஸார்! அப்ப எமர்சன் துரை குதிரை மேலே பரங்கிமலைக்குப் போறான். நான் தொரைசானி அம்மாளை இட்டுக்கினு பங்களூருக்குப் போறேன். ஏன்? நாய்க்குட்டி புடிச்சாற, துரைசானி அம்மாளுக்கு என் மேலே உசிரு, ஸார். 'ரங்ஸாம் ரங்ஸாம்'னு ஓயாமே கூப்பிட்டுக்கிட்டேயிருக்கும்.

"அது என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசும். 'ஓல்ட்மேன்'னு எங்கிட்டே ஒரு பிரியம் ஸார் அதுக்கு! அவ்வளவுதான்.

"பங்களூரிலே போய் 'ரங்ஸாம்! ஒயின் சாப்பிடறயாடா'ன்னு கேட்டுச்சு. அதுன்னா மாத்ரம் எனக்கு ரொம்ப இஷ்டம் ஸார்! பங்களூர் போனா 'அது' இல்லாம வரமாட்டேன். துரைசானி அம்மாதான் வாங்கிக் குடுக்கும். நான் செலவு பண்ண முடியுமா?

"இந்த மாதிரி எத்தினி தொரைங்க பாத்திருப்பேன்! எத்தினி தொரைசானிங்க பாத்திருப்பேன்! ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி,ஸார். இப்பல்லாம் காலம் மாறிப் போச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/95&oldid=1481073" இலிருந்து மீள்விக்கப்பட்டது