உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கைதி எண் 6342.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இல்லை!' என்று நான் பலமுறை கூறிய பிறகே, வண்டியில் ஏறினார்.

போலீஸ் நிலையம் சென்று ஜீப் நின்றது; உள்ளே, இரும்புத் தொப்பிக்காரர் ஏராளம்.

ஐவரும் உள்ளே சென்று ஒரு பலகை மீது அமர்ந்தோம்.

அங்கு இருந்த இரும்புத் தொப்பிக்காரர், எங்களைப் பார்த்துக்கொண்டு, நின்றிருந்தனர்—ஒருவரும் பேசவில்லை. எனக்கே என்னமோபோல இருந்தது. ஏதாவது பேசிவைப்போம் என்ற எண்ணத்தில், "நீங்களெல்லாம் ரொம்ப நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். வேடிக்கையான பேச்சு என்றுதான் இதனை யாரும் கருதிக்கொள்வார்கள். ஆனால் பாவம், அந்தப்போலீஸ்காரர்கள், அதற்குக்கூடப் பதில் கூறவில்லை; கூச்சம், அச்சம்! அருவருப்பும் அல்ல, கோபமும் அல்ல என்பதை அவர்களின் பார்வை விளக்கிக் கொண்டிருந்தது; அவர்கள் பேசாமல் நின்றது, இன்றைய ஆட்சியில், யாராருக்கு அச்சம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிற்று. இதைக் கண்டு நான் வியப்புற்றேன். ஆனால் அடுத்த கணம், வேறோர் வியப்புக் கிளம்பிற்று. என்னுடைய பேரளத்துச் சம்பந்தியை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்கள், அவரும், எங்களோடு வந்தவர். எனவே கைது செய்யப்பட வேண்டியவர் என்ற கருத்தில், பேரளத்தார் எனக்குச் சம்பந்தியாகி மூன்று மாதம்தான் ஆகிறது! என்னோடு சேர்ந்ததற்காக, அவருக்கும் போலீஸ் கொட்டடியிலே நுழைவு! எனக்கு வியப்பாகவும் இருந்தது, வருத்தமாகக் கூட இருந்தது. என்னென்ன எண்ணிக்கொள்கிறாரோ, என்று வேறு, மனதிலே கொந்தளிப்பு. அதிகாரியிடம் விளக்கம் கூறினேன்—அவர் என் உறவினர்—வெளியூர்—கழகத்தாரும் அல்ல; கிளர்ச்சிக்காகவும் வரவில்லை என்றேன். அதிகாரி, "எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்களுக்குக் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு மோட்டார்களில் கழகத்தார் வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அதிலே ஒரு மோட்டாரில் இவர்! எனவே இவரும், கைதுதான், கமிஷனரிடம் விளக்கம் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/15&oldid=1572397" இலிருந்து மீள்விக்கப்பட்டது