17
பெரிய கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்கள், சர்க்காரைக் கவிழ்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் பிடி பட்டால், அவர்களை, ஒரே இடத்தில், சிறை வைப்பது இல்லை. பிரித்துப் பிரித்து, தனித்தனியாகச் சிறை வைப்பார்கள். இது போலீஸ் முறை, வழக்குகளுக்குத் தேவையான துப்புகள் பெறவும், சாட்சிகள் சிதையாமல் பார்த்துக்கொள்ளவும், இந்த முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.
நாங்கள் ஐவர் தானே கிடைத்தோம்—எனவே, அந்த முறையை, மெத்தச் சிரமப்பட்டு, எங்கள் விஷயத்தில் உயர்தரப் போலீஸ் அதிகாரிகள் கையாண்டனர். கேலிக் கூத்தல்லவா என்பீர்கள். நடந்ததே!!
பொன்னுவேல், பட்டப்படிப்புப் பெற்ற இளைஞர்; பொறுப்புமிக்க குடும்பத்தினர். அவர்மீது, கலகம், அடிதடி முதலிய எந்தவிதமான புகாரும் சுமத்தப்பட்டதுகூட இல்லை. என்னோடு, விலைவாசிக் குறைப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் இருந்தவர்!
வெங்கா என்ற இளைஞர், நிலபுலத்துக்கு உரியவர், அமைதியானவர், அச்சிறுபாக்கத்தை அடுத்த சீதாபுரம் என்ற சிற்றூரில், மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர். பார்த்தாலே புரிந்துவிடும் படபடப்பான நடவடிக்கையில் கூட அவர் ஈடுபடமாட்டார்—ஈடுபடக் கூடியவர் அல்ல என்பது.
கிளர்ச்சி பார்த்தசாரதி—தாத்தாவானவர்—கழகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்—கழகவரலாறு தொகுத்து அளித்தவர்—வில்லிவாக்கத்தில் வீடும் வாசலும் உடையவர்—பொறுப்பற்ற செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல.
சுந்தரம்—சென்னையில், தையற்கலையில் சிறப்பிடம் பெற்று விளங்குபவர்—தையற்கலை பற்றி பல நூற்களை வெளியிட்டு, புகழ் ஈட்டியவர். எப்போதும் இதழோரத்தில் ஓர் புன்னகை தவழும்; அவர்மீது எந்தவிதமான கலகம், அடிதடிபோன்ற வழக்குகளும் கட்டிவிடப்பட்டதுகூட இல்லை.