உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கைதி எண் 6342.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

கிறார். சிறை அதிகாரி ஒருவர் தென்னமரக்குடி எண்ணெய் தான் இந்த வலியைப் போக்கும் என்று கூறினார்—மாயவரம் சென்று வரும்போது அந்தத் தைலத்தை வாங்கிக் கொண்டு வரும்படி, பரிமளத்துக்குச் சொல்லி இருக்கிறேன். கையோ, இன்னமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தூக்க முடியாதபடிதான் இருக்கிறது.

இன்று, காஞ்சிபுரம் மணி, திருவேங்கிடம், கிளியப்பன் ஆகியோரைக் காண, அவரவர்களின் வீட்டினர் வந்திருந்தனர். அதிகமான கலக்கம் காட்டவில்லை என்று கூறினார்கள். எல்லோரும் களிப்பாகவே இருக்கிறார்கள்.

16—4—64

தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மதி ஒரு உறுப்பினர்—குழு, மே பதினோராம் நாள் கூடுகிறது. அதற்குச் சென்று கலந்து கொள்ளத் தக்கவிதமாக, விடுதலைநாள் அமையுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, மதியும் பார்த்தசாரதியும் இன்று சிறைமேலதிகாரியைக் காணச் சென்றனர். சிறையில் வேலை செய்வதற்காக, மாதத்திற்கு நான்கு நாட்கள் கழிவு உண்டு; இது மூன்று மாதத்திற்கு மேற்பட்ட தண்டனையாக இருந்தால்தான்—அதிலும் கடுங் காவல் தண்டனையாக இருக்கவேண்டும்.

சிறை மேலதிகாரியைக் காணச்சென்றதில் ஒரு திடுக்கிடத்தக்க தகவல் தெரியவந்தது. தொத்தா மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கும் முறையில் இங்குள்ள நமது கழகத் தோழர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். சிறை மேலதிகாரிகள் மிகக் கோபம் கொண்டு விட்டனர். 'ஐயா! உங்கள்பேரில் கோபித்துக் கொண்டோ, சிறை நிருவாகத்தின்மீது அதிருப்திகொண்டோ நாங்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது எங்கள் குடும்பத்திலே நேரிட்டுவிட்டதுபோன்ற ஒரு இழப்புக்காக வருத்தம் கொண்டு நடத்தப்படும் ஒரு மரியாதைச் சடங்கு' என்றெல்லாம் தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதுபோல எழுதிக்கொடுக்கச் சொல்லியும் அதிகாரிகள்

கை.—14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/217&oldid=1592183" இலிருந்து மீள்விக்கப்பட்டது