பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

124, 135, 137, 209, 231, 262, 283, 398), புறநானூற்றில் ஒன்றும் (புறம் 282) நற்றிணையில் 10-ம் ஆக அறுபத்தெட்டுச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவருடைய செய்யுட்கள் அழகும் இனிமையும் பொருள் செறிவும் சொற்செறிவும் உடையவை. இவர் காட்டும் உவமைகளும் உலகியல் உண்மைகளும் அறிந்து மகிழத்தக்கவை.

“அறன் கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்.” (அகம். 155:1-3)

என்று இவர் கூறியது என்றும் மாறாத உலகியல் உண்மையாகும்.

“உள்ளது சிதைப்போர் உ ளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை யிரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மைத் தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி.” (குறும். 283:1-4)

இது எல்லோரும் கொள்ள வேண்டிய பொன் மொழியன்றோ ?

திருவிழாவின் போது உயரமான கம்பத்தில் இராத்திரியில் பல விளக்குகளை ஏற்றி வைப்பது அக்காலத்து வழக்கம். இந்தக் கம்ப விளக்கை, மலை மேல் வளர்ந்த இலையுதிர்ந்த இலவமரம் செந்நிறப் பூக்களுடன் திகழ்வது போல இருக்கிறது என்று உவமை கூறியிருப்பது இயற்கையான உண்மையைத் தெரிவிக்கின்றது.

"அருவி யான்ற வுயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில் மலர்ந்த இலவம்” (அகம் 185:10-12)