பக்கம்:கொடி முல்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 3

வழியில் முளைத்த காதல்.
கருவிழிகள் ஒன்றை ஒன்று கவ்வின

தேன் ததும்பும் பூப்பறித்தாள் முல்லை; நாறும்
செடிபறித்தாள் தொடுத்திட்டாள்; ஆங்கு வந்த
மானைத்தன் மார்பணைத்தாள்; 'போ! போ!' என்று
வந்த இளம் பசுங்கன்றை விரட்டி நின்றாள்.
'ஏன் இந்த ஒரவஞ்சம்?' என்று கிள்ளை
இணைந்தவளைத் தொடர்ந்துவரும்; அணிலைத் தாவும்!
பூனையைப்போல் தொடர்ந்தல்வி வந்தாள்; கண்ணைப்
பொத்திநின்றாள். கொடிமுல்லை 'அல்லி என்றாள்.

'பள்ளியிலே படிப்பவர்கள் இன்பச் சிட்டு!
பதைபதைப்பு நிறைஆட்டுக் குட்டி! இன்று
பள்ளியிலே நாம்படித்த நாளைப் போலப்
பறந்தோடி உனைப்பிடிக்க எனது நெஞ்சம்
துள்ளுதடி! ஒடெ'ன்றாள் அல்லி! ஆனால்
தொடுபார்ப்போம்’ எனப்பாய்ந்தாள் முல்லை! இன்பம்
அள்ளுதற்குப் பெட்டையினைத் துரத்திச் செல்லும்
ஆண்கோழி போல்அல்லி துரத்து கின்றாள்!

கிளையடர்ந்த மரம்சுற்றிச் செடிகள் நீக்கிக்
கெக்கலித்துக் கொடிமுல்லை தாவி வந்தாள்:
தளிர்மேனி வியர்த்தாடை நனைய, மேதி
வாலொத்த சடை அலைய, உயர்ந்த சங்கு
வளையொலிக்கக் கொடிமுல்லை தொடரும் அல்லி
வழிபார்த்துப் பறந்தாள்; மேல் விளைவு காணாள்.
களை நீங்க வேர் மீது தலையை வைத்துக்
கண்ணுறங்கும் காளையின்மேல் தடுக்கி வீழ்ந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/11&oldid=1252872" இலிருந்து மீள்விக்கப்பட்டது