பக்கம்:கொடி முல்லை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

33


சிற்றுளியை எடுத்தழகன் மீண்டும் அந்தச்
சிலைதிருத்திக் கொண்டிருந்தான். அங்கு வந்து
கற்சிலையை மானவன்மன் முறைத்துப் பார்த்தான்;
கல்லுடைக்கும் பெருஞ்சுத்தி விரைந்தெ டுத்துப்
பொற்புடைய அச்சிலைமேல் அடித்தான். சீறிப்
புலிபோல மாணவன்மன் பார்வை நோக்கிச்
சிற்றுளியால் குத்திவிட்டான் அழகன். கும்பல்
சேர்ந்ததடா! தலைக்காட்டை எங்கும் பாரே!

'பிழைஇல்லை அழகன்மேல்' என்றார் உண்மை
பிழைஆயும் ஒருசாரார்; 'மான வன்மன்
பிழைப்பதினி அருமை’ என்றார் பலபேர்; அவ்வூர்ப்
பெருந்தலைகள் கையுயர்த்திக் கூவிக் கூவிக்
'தொழுவாருக் கடுத்தபடி அரசன் என்று
தொன்று தொட்டு வருகின்ற பழக்கம் மீறி
வழுச்செய்தான் கற்றச்சன்; கீழ்மேல் என்ற
வரம்பினையே மறந்துவிட்டான்; படட்டும்!' என்றார்.

தெருவெல்லாம் சிலவீணர் கூடிக் கூடிச்
செந்தமிழர் சீர்குலைத்த வரலாற் றைப்போல்,
'இருவருமே ஒர்பரத்தை வீட்டில் முன்னாள்
இருந்ததினால் ஏற்பட்ட கொலைதான்' என்றே
உருவாக்கி விட்டார்கள்; அந்தோ! இன்னும்
உரைப்பதெல்லாம் உண்மை என்று நம்புகின்ற
பெரியார்வாழ் தமிழகத்தே கட்டி விட்ட
பேச்சிற்கு மதிப்பற்றுப் போமோ? சொல்லீர்!

கொ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/39&oldid=1253084" இலிருந்து மீள்விக்கப்பட்டது