பக்கம்:கொடி முல்லை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணி தாசன்

35


முடிசூடிச் சின்னாளில் ஆளும் வேந்தன்;
மெத்தவலி கயவாகைக் கடல்க டந்து
வெற்றிகொண்ட நம்படையின் தலைவன்' என்றான்.

'உன் கருத்தைப் *போத்தரையன் சொல்க' ஏன்றான்.
ஒளித்தவிசை நுழைபுலத்தான் விட்டெழுந்து
'மன்னர்மா மன்னவனே! குற்றவாளி
வாய்பிடுங்கிக் கோடாது துலைபோல் தூக்கி
முன்னவர்கள் தீர்ப்புரைத்தார்; நீரோ இன்று
முறைதவறிப் பறக்கின்றீர்; எதையும் சற்று
முன்பின்னே ஆய்ந்துணர்ந்த பின்னர் நல்ல
முடிவிற்கு வருவதுதான் மேன்மை' என்றான்

'மான வன்மன் நரசிம்ம வர்மன்வீட்டு
மாப்பிள்ளை என்பதை நீ மறந்தாய் போலும்;
நான்விரும்பேன்; பிழைஆய்ந்து கடத்தேன் நாளை'
என்றிட்டான் மாமல்லன். அமைச்சன் சொல்வான்:
மானந்தான் தமிழருக்குப் பெரிது. நாட்டில்
பழிதாங்கி வாழ்வதுவோ? உமது முன்னோர்
மானவன்மன் என்றும்மற் றொருவ னென்றும்
வழிதவறி நடந்ததுண்டோ? சொல்வீர்!’ என்றான்.

தலைதாழ்த்தி நின்றிருந்த அழகன் சொல்வான்:
தமிழரசே! நான்குற்ற வாளி அல்லேன்.
கலைஞருக்குக் கலை உயிராம்! பலநா ளாகச்
செதுக்கிவைத்த கற்சிலையை மாணவன்மன்
குலைத்ததனால் நான்வெகுண்டேன்; இதுவே உண்மை!
குற்றம்யார் மேல்?, என்றான். அவையில் வாழ்நர்
கலைஞனையும் அரசனையும் மாறிமாறிக்
கண்டிருந்தார்; துணிவில்லாக் கோழை மக்கள்!


  • போத்தரையன்-பல்லவ அரசர்களை குறிக்கும்

பட்டப் பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/41&oldid=1253086" இலிருந்து மீள்விக்கப்பட்டது