பக்கம்:கொடி முல்லை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 2


அரசனும் அமைச்சனும் மூதூர் சமைக்க முடிவு கட்டினர்.

'பொன்னலைகள் வீசுகின்ற கடலோ, வானிற்
புது நாடோ, மலைசெறிந்த காடோ, என்றன்
அன்னை எழில் கலையரசி தீட்டு கின்ற
அழகுதிரைச் சீலையோ, செங்குருதி ஆறோ,
பொன்பழுக்கும் பேருலையோ, அந்தி வானம்?
புதுமையடா’ புதுமை!' யென்றான் கச்சி வேந்தன்.
"ஏன் அரசே! வணக்க' மென்றான் நுழைபு லத்தான்.
எழிலுலகம் பின்னிழுக்க மன்னன் வந்தான்.

'நான்நினைத்த நினைப்பைப்போல் புலவன் ஒலை
நறுக்கினிலே பாட்டிசைத்தான்; விந்தை! விந்தை!
ஏன் வாழ்ந்தார் என் முன்னோர்? இந்த நாட்டில்
ஏதுசெய்தார் ? புதுமையொன்றும் இல்லை! இல்லை!
நான்செய்வேன் அப்புதுமை; ஆய்ந்து சொல்லாய்
நல்லமைச்ச!' என அரசன் நவின்றான். 'செத்துப்
போனவரைப் பழிகூற வேண்டாம், வேந்தே!
புகழ்நடுக’ என அமைச்சன் எடுத்துச் சொன்னான்

மாமல்லன் ஏதேதோ எண்ணிப் பின்னர்
'மானவன்மன் என்மகளை மணக்கும் முன்னே,
ஏமம்சேர் நிலாமுற்றம், வசந்த வாவி,
எழிற்கூடம், கற்சிலைகள் நிறைந்த குன்றும்,
தாமமைப்போம் நம்பேரால் ஓரூர்' என்றான்.
'நல்ல' தென்றான் நுழைபுலத்தான். அரசன் மீண்டும்
'நாமழிந்து போனாலும் ஊரும் பேரும் ..
நம்நாடு போல்நிலைக்கச் செய்வோம்' என்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/9&oldid=1244441" இலிருந்து மீள்விக்கப்பட்டது