உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

மெதுவாக மிதந்து செல்லலாயிற்று. இப்படிச் சுமார் நூறு கஜம் சென்றதும் தங்கமணி பேசத் தொடங்கினான். "சுந்தரம், இப்போதும் நாம் இரண்டு பேரும் மாறிமாறித் துடுப்புப் போடுவோம். ஒரே இருட்டாகவே இருந்தாலும் கரையில் உள்ள மரங்கள் தெரிகின்றன. கரை ஓரமாகவே ஆற்று வெள்ளம் போகிற திசையில் மெதுவாகப் பரிசலைச் செலுத்த முயலுவோம்” என்று அவன் கூறினான்.

"ஆற்றுவேகத்தை எதிர்த்து மறுகரைக்கு உங்களால் பரிசலைத் தள்ள முடியுமா?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள். மறுகரைக்குப் போனால் சத்திரத்திற்கு ஓடிவிடலாம் என்பது அவள் ஆசை.

"நேருக்கு நேராக எதிர்க்கரையை நோக்கிப் போக முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று வெள்ளத்தோடு பரிசலைப் போகவிடலாம். முதலில் தாழிவயிறனிடமிருந்து தப்பவேண்டும். பிறகுதான் மற்ற வேலை” என்றான் தங்கமணி.

"தேங்காய் தீர்ந்துவிட்டால் தாழிவயிறன் நம்மையே வாயில் போட்டுக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. அப்பா! எத்தனை தேங்காயைத் தின்று தீர்த்துவிட்டான்” என்றான் சுந்தரம்.

"எதிர்க்கரையைச் சேராவிட்டாலும் தாழி வயிறனுக்கும் குள்ளனுக்கும் தப்பி வந்துவிட்டோம். இது நமக்கு முதல் வெற்றி" என்று கூறிக்கொண்டே தங்கமணி ஜின்காவிற்கு ஏதேதோ சமிக்ஞைகள் செய்தான்.

"டேய் ஜின்கா, ஆற்றில் பாய்ந்து நேராகச் சத்திரத்திற்குப் போ; அப்பா இல்லாவிட்டாலும் அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு உடனே வந்து சேர். ஆற்று ஓரமாகவே வந்து பரிசலுக்கு வந்துவிடு" என்று சொல்லிவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தான். ஜின்கா உற்சாகத்தோடு ஆற்றில் குதித்து வேகமாக நீந்திச் செல்லலாயிற்று.

"அம்மாவிடம் கொடுக்கச் சொன்னாயே, ஏன்?” என்று கண்ணகி கேட்டாள். "அந்தக் குள்ளன் நம்மை இந்தக் காட்டிலே சிறை செய்துவிட்டுச் சும்மா இருந்திருக்கமாட்டான். அவன் என்னவாவது சூழ்ச்சி செய்திருப்பான் என்று எனக்குத்