பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

“முதலில் ஐயாவுக்குக் கொஞ்சம் தாகத்திற்கு ஏதாவது கொண்டுவரட்டுமா?” என்று தில்லைநாயகம் கேட்டார்.

“இப்போது யாருமே உன் குகைக்குள்ளே போக முடியாதே. அது தான் ஜெயிலாக மாறிவிட்டதே” என்று சுந்தரம் சொன்னான்.

“அதென்னடா ஜெயில்! எல்லாம் விந்தையாக இருக்கிறதே!” என்றார் வடிவேலு.

“அப்பா, அதற்குள்ளே உங்கள் கூடவந்த அந்த ஐந்து தடியர்களும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். எல்லாம் அண்ணாவின் தந்திரம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கண்ணகி கூறினாள்.

ஒருவர் பேசுவதற்குள் இன்னொருவர் பேசி, நடந்ததையெல்லாம் கூறத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வடிவேலுவுக்கு நடந்ததையெல்லாம் கோவையாக அறிந்து கொள்வதே சிரமமாக இருந்தது. இருந்தாலும் அவருக்கு ஒரே ஆனந்தம். தம் மகன் தங்கமணியைப்பற்றி மனத்திற்குள்ளேயே மிகுந்த பூரிப்பெய்தினார்.

நடந்ததையெல்லாம் ஒருவாறு புரிந்துகொண்டதும் வடிவேலு. மேற்கொண்டு நடக்கவேண்டியவற்றில் எண்ணம் செலுத்தலானார்.

“தங்கமணி, நாம் இப்போது அந்த ரகசியக் குகைக்குச் சென்று, கொல்லி மலைக் குள்ளனைப் பிடித்துக் கட்டவேண்டும். அது தான் முதல் வேலை. மருதாசலம், தில்லைநாயகம் இருவரும் கூட வரட்டும். நீயும் வா” என்று அவர் கூறினார்.

மருதாசலமும் தில்லைநாயகமும் சிறிது ஐயத்தோடு பார்த்தார்கள். அவர்கள் அப்படிப் பார்ப்பதன் பொருளை அறிந்து கொண்டு வடிவேலு, “பயப்படாதீர்கள், நாம் மூன்று பேரும் சேர்ந்தால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஏமாந்த சமயத்தில் அவனும் அவனுடைய ஆள்களும் என்னைக் கட்டிப் பிடித்துவிட்டார்கள். இல்லாவிட்டால் நானே அவனை ஒரு கை பார்த்திருப்பேன்” என்று கூறினார். அவருடைய நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு அவர்கள் இருவரும்