உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கோடுகளும் கோலங்களும்

பையன். தொட்டுத் தொடாமல்... நீலவேணிக்கு அண்ணன் பிள்ளை உறவு. எட்டாவது ஃபெயில். இங்கே வேலைக்கிருக்கிறான். ரங்கனுடன் பேசும் ஆள் தாடி வைத்திருக்கிறான். பெரிய பொட்டு, மல் ஜிப்பா, தங்கப்பட்டைக் கடிகாரம், மோதிரம்...

“யாரப்பாஅது?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.

“அவுருதாம் புரோக்கர் பன்னீரு.”

“முதலாளிக்கிட்டப் போயி, ஒரு நிமிசம் வந்திட்டுப் போகச் சொல்லு...” .

நிற்கிறாள். அவன் ஏதோ சொல்லியனுப்புகிறானே ஒழிய வேண்டுமென்றே திரும்பிப் பார்க்கவில்லை.

சீ இப்படி ஒரு அவமானமா? இந்த ஆளிடம் என்ன கேட்க? விடுவிடென்று வீட்டுக்கு வருகிறாள். முன்பே வண்டியில் இடுபொருட்கள், விதை மூட்டைகள் வந்திருக்கின்றன. வாசல் நடைத்திண்ணையில் அடுக்கியிருக்கிறான்.

செவந்தி உள்ளே சென்று பையில் உள்ள ரசீது, பத்திரங்களைப் பெட்டியில் வைத்துப் பூட்டுகிறாள்.

கிணற்றடியில் சென்று, தண்ணிரை இறைத்து ஊற்றிக் கொண்டு குளிக்கிறாள். சேலையைச் சுற்றிக் கொண்டு வருகையில், அப்பனும் மாப்பிள்ளையும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள்.

“சுடுதெண்ணிகாச்சி வையி” என்று சொல்கிறார் அப்பா. சோறு ஆறி இருக்கிறது. செவந்திதான் சோற்றை வைத்து, சட்டியில் இருந்த காரக் குழம்பை ஏனத்தில் ஊற்றி எடுத்து வருகிறாள்.

“அப்பளப்பூ வறுக்கலாம்னு பார்த்தே. எண்ணெயில்ல...” என்று அம்மா பின்பாட்டுப்பாடுகிறாள்.

“வெறும் சோத்த எப்படித்தின்ன? ஒரு கீரை, அவரை ஒரு எழவும் இல்ல! வரவர வூட்டுல ஏன் வாரோமின்னிருக்கு” என்று கணவன் கோபிக்கிறான்.