ராஜம் கிருஷ்ணன்
187
சென்ற ஆண்டில் சுவர்ணவளி நெல்லைப்போட்டு அது அறுவடையாகும் சமயத்தில் மழை கொட்டிப் பயிர் நஷ்டமாகிவிட்டது. வீட்டைச்சுமாராகச் செப்பனிட்டிருக்கிறாள். ஆனால் போக்கியத்துக்கு விட்ட நிலத்தை மீட்பது லட்சியமாகவே இருக்கிறது.
“அம்மா லீவு நாளில் நடவு வைத்துக்கொள். நானும் ஒரு கைக்கு வாரேன்” என்று சரோ நிலத்து வேலையில் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது. சாந்தி சைக்கிளில் வந்து நடவு நடுவதை விட கால் சட்டையைச் சுருட்டி விட்டுக் கொண்டு சேற்றில் இறங்கும் மகள் புதுமையாகிறாளே? முடி, பின்னல் நீண்டு விழும். அதிகாலையில் எழுந்தாலும் சீவிச் சிடுக்கெடுக்க எண்ணெய் முழுக்காடி நேரம் செலவழிக்க முடியவில்லை. மரபுகள், கோடுகள் அழிக்கப்படுகின்றன. அவளே ஒரளவு முடியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அளவாக அம்மாவையே கத்திரிக்கோலால் வெட்டிவிடச் சொல்லிவிட்டாள்.
"இதென்னடீ அநியாயம்? வாழுற வூட்டுப் பொம்புள இப்படிச் செய்யலாமா” என்று பாட்டி ஆரம்பித்ததுதான் தாமதம். பட்டென்று சென்று வாயைப் பொத்துவாள் சரோ.
“பாட்டி உங்க காலம் அது. இது எங்க காலம் சும்மாருங்க! இங்க நா முடி சிங்காரிச்சிட்டிருந்தேன்னா பஸ் போயிடும்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள்.
கோடுகள் அழியப்படும் போது கூக்குரல்கள் எழத்தான் எழுகின்றன. ஆனால் மன உறுதிக்கு முன்அந்தக்கூக்குரல்கள் எடுபடாதுதான். செவந்திக்குத்தான் மகள் எது சொன்னாலும் நியாயமாக வேத வாக்காக இருக்கிறது.
“ஆம்புளப் புள்ளங்க கூட படிகிறதுன்னா, தொட்டுப் பழகாமலா இருக்கும் 2 சதா சினிமா டி.வி.ல காட்டுறாங்களே? செவந்தி புத்தி கெட்டு இந்தப் பொண்ண வுட்டு போட்டா. என்னகொண்ட்டு வரப்போகுதோ...” என்று அம்சுவின் அத்தை பிரலாபித்தது அவள் செவிகளில் விழுந்து விட்டது. விடுவிடென்று போகிறாள்.