பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

193

ரங்கன் மெளனமாக கலத்தில் போட்ட சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது தான் பாட்டியும் பேரனும் டி.வி. பார்த்து விட்டு வருகிறார்கள். “ஏய் இங்க வா! படிக்கிறப்ப இப்படி ராத்திரி பத்து மணிக்கு டி.வி. பாத்திட்டு படிச்சி எப்பிடித் தேருவே? ரெண்டாயிரம் கட்டி சேர்த்திருக்கு. சரோக்கு ஒரு பத்து பைசா அதிகமா செலவு பண்ணல. இன்னி வரையிலும் அவங்க டீச்சர் எல்லாம் பெருமையா பேசும்படி வந்திச்சி. நீ...” இழுத்து வைத்து முதுகில் ஒர் அறை விடுகிறான்.

உடனே சரவணன் பெரிதாக அழத் தொடங்குகிறான். “மூடுமூடு ராஸ்கல். சத்தம் போட்டே பலி வச்சிடுவே. மூடு. அக்கா மாடல் கொஸ்சின் பேப்பர் அவங்க பிரண்ட்கிட்டந்து வாங்கிக் கொடுத்திருக்கு, போயி சோறு துன்னிட்டுப் படுத்துக்க. விடிகாலம நாலு மணிக்கு எழுப்பி விடுவே.. படிக்கணும்! போ..”

பாட்டிக்குப் பொறுக்கவில்லை. “அது வரலன்னுதா சொல்லிச்சி. நாந்தா கூட்டிட்டுப் போன. அங்க அவன் புஸ்தகம் வச்சி படிச்சிட்டுதா இருந்தா.”

“அது சரி கெடுக்கறதே நீங்கதா. நீங்க டி.வி. பார்க்கப் போனா அவ எதுக்கு? போங்க! போங்க!”

வேலை முடிந்து மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு செவந்தி சேலையை உதறிக் கொண்டு வாயிலுக்கு வருகிறாள். ஒரே புழுக்கமாக இருக்கிறது. காற்றே வரவில்லை.

தரையில் தலைப்பை உதறிக் கொண்டு தலை சாய்கிறாள்.

"செவந்தி... ஒரு விசயம் சொல்ல வாணாம்னாலும் சொல்லாம முடியல... முருகன் இப்ப பத்து நாள் மின்னக் கூட பட்டணம் வந்திருந்தானாம். வயிற்றுவலி அல்சர்ன்னு வைத்தியம் பண்ணிக்கிறானாம். இளைச்சிப் போயிட்டான். அவங்க மச்சினிச்சி வீட்டில் பார்த்தேன்னு சின்னம்மா சொல்லிச்சி. ருக்கு அங்கதா ஏரிக்கரைப் பக்கம் குடிசையில் இருக்காப்பல. இவங்க ஏரிக்கரைப் பக்கம் ஜீவா நகர்ன்னு புதிசா வீடுகள் கட்டிருக்காங்க. அங்க இருக்காங்க.